தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ நா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என நாங்கள் கூறவே இல்லையே??

harsa1போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக இலங்கைக்கு ஐ.நா இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ள நிலையில், குறித்த இரு வருட காலப்பகுதிக்குள் இவற்றையெல்லம் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்து கால அவகாசத்தை பெறவில்லையென வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
”ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் ஆணையாளர் செயிட் அல் – ஹூசைன் வெளியிட்ட அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அறிக்கை வேறு. தீர்மானம் வேறு. அறிக்கைகளால் எதுவும் செய்ய முடியாது. சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாக அறிவித்ததன் பின்னும் மஹிந்த அணியினர் வீணாக பரப்புரை செய்கின்றனர்.
மஹிந்தவின் ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். இதை வைத்துக் கொண்டு நாம் படையினரைத் தண்டிக்கப் போவதாக மஹிந்த அணியினர் பரப்புரை செய்வதில் எவ்வித உண்மையும் கிடையாது. நாம் ஒருபோதும் படையினரைக் காட்டிக் கொடுக்கமாட்டோம்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. எமக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இவை தொடர்பில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து இரண்டு வருடங்களின் பின் ஐ.நாவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கே எமக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Comments
Loading...