Designed by Iniyas LTD
ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த அழுத்தம் கொடுப்போம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்குமாறு இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் நேரில் வலியுறுத்துவோமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம்
செய்வுள்ளமை தொடர்பில் வினவியபோதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இவ்விஜயத்தின்போது எதிர்வரும் 9ஆம் திகதிவரையில் இலங்கையில் தங்கியிருக்கும் ஹூசைன் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளதோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிடவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு குழுவினரையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகளுடனான ஆணையாளருடன் நேரடியான சந்திப்பு தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான இணை அனுசரணையையும் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்ததோடு அதனை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதாகவும் உறுதிமொழிகளை பகிரங்கமாகவே வழங்கியிருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போது அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குரிய இறுதிப் பொறிமுறையானது தீர்மானிக்கப்படவில்லை. அதேநேரம் தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போன்று விசாரணையின்போது பொதுநலவாய மற்றும் வெ ளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குரைனர்கள், விசாரணையாளர்கள் பங்கேற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் தற்போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேநேரம் விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முழுமையாக திருப்தியளிப்பதாகவில்லை.
இந்நிலையிலேயே ஐ.நா.தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் முன்னெடுத்துள்ள விடயங்கள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வருகை தருகின்றார்.
அவரை நேரில் சந்திக்கவுள்ள நாம் ஐக்கிய நாடுள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி கோரவுள்ளோம். அது மட்டுமன்றி எமது மக்கள் எதிர்நோக்கும் குறுகிய மற்றும் நீண்டகாலப்பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக்கூறவுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு தனது நடவடிக்கைளை முன்னெடுப்பார் என்ற அபரீதமான நம்பிக்கையுள்ளது என்றார்.