தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.நா.வே இலங்கைக்கு காலக்கெடு கொடுத்தது போதும் – கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக, ஏ9 வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியுள்ளமையினால், குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் ஐ.நா.வே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் OMP அலுவலகத்தை நிராகரிக்கின்றோம், ஐ.நா.வே இலங்கைக்கு காலக்கெடு கொடுத்தது போதும் குற்றவியல் நீதிமன்றிற்கு பாரப்படுத்து போன்ற பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரின் கவனத்தை ஈர்க்கும நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...