Designed by Iniyas LTD
ஐ படப் பாணியில் நடந்ததா விச ஊசி விவகாரம்?
தமிழீழ மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் கருத்துக்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. சிறிலங்கா அரசு இனப்படுகொலைக்கான, போர் குற்றத்திற்கான, மனித உரிமை மீறல்களுக்கான விமர்சனங்களை எதிர்கொள்ளும் இந்தக் காலத்தில் இது சிங்கள அரசின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு பயங்கரமாக வெளிப்படுகின்றது.
அண்மையில் நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் கருத்தறியும் அமர்வில் ஒரு முன்னாள் போராளி அதிரடியாக சாட்சியம் அளித்தார். அதில் தமக்கு தடுப்பில் வைத்து ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் அவை தமது உடல் வலுவை பாதிக்கும் விச ஊசிகளாக இருக்கலாம் என்றும் அதன் பின்னர் தன்னால் பாரம் எதனையும் தூக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிப்பதாகவும் அவர் சொன்னார்.
அண்மைய காலத்தில் முன்னாள் போராளிகள் நூற்றுக்கணக்கானவர்கள் வடகிழக்கிலும் வெளிநாடுகளிலும் இறப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் பலர் மன அழுத்தங்களுக்கும் வேறு உடல் நோய்களுக்கும் ஆளாவதாகவும் கூறப்படுகிறது. தற்கொலைகளும் மரணங்களும் சாதாரணமாகியுள்ள நிலையில் குறித்த முன்னாள் போராளியின் சாட்சியம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதேவேளை இங்கு மற்றுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட செண்பகம் தலைப்படுகிறது. ஏற்கனவே, வேலையின்மை, இராணுவ நெருக்கடி, உடல் நோய்கள் என மன அழுத்தங்களின் மத்தியில் வாழ்ந்த முன்னாள் போராளிகளையும் எதனையும் அறியாமல், உணராமல் வாழ்ந்த முன்னாள் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் விச ஊசி குறித்த செய்திகள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
அண்மையில் வவுனியாவில் நடந்த சிறிலங்கா அரசின் கருத்தமர்வில் முன்னாள் போராளி ஒருவர் சாட்சியம் அளிக்கையில் இந்தச் செய்தி தம்மை மீண்டும் பெரும் உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தியிருப்பதாக கூறினார். தானும் உடல் ரீதியாக மாற்றங்களை உணர்வாதாகவும் ஆனால் இந்த செய்திகளால் மேலும் பாதிக்கப்பட்டு தமது வாழ்வும் குடும்பமும் இன்னும் பாதிக்கலாம் என்றும் இருக்கும்வரை எதையும் அறியாமல் இருப்போம் என்றும் அவர் கூறினார்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சு முன்னாள் போராளிகள் மருத்து ஆய்வுக்கு பெயர்களை பதிவு செய்யுமாறு கோரியுள்ளது. தற்போது பல முன்னாள் போராளிகள் தமது உடலை ஆய்வு செய்ய பெயர்களை பதிவு செய்துள்ளனர். மனம் தளராமல் அனைத்து முன்னாள் போராளிகளும் இந்த ஆய்வுக்கு முன்வரவேண்டும் என்றும் வடக்கு சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது. அத்துடன் உயிரிழந்த முன்னாள் போராளிகளின் விபரங்களும் மருத்துவம் பெற்றவர்களின் விபரங்களையும் வடக்கு அரசு திரட்டுகிறது.
போராளிகளின் விச ஊசி விவகாரம் அண்மையில் வெளியான ஐ படத்தை நினைவுபடுத்துகிறது. இந்தப் படத்தின் நாயகனின் அழகை ஒழிக்க வில்லன் ஐ வைரஸ் ஊசியை ஏற்றுகிறான். இதைப்போன்ற சம்பவங்கள் பல உலகில் இடம்பெற்றுள்ளன. உலகில் உள்ள ஆளுமைகளை அழிக்க இவ்வாறான செயற்பாடுகள் பல இடம்பெற்றுள்ளன. சிங்கள இனப்படுகொலை அரசு இவைகளைப் பின்பற்றி எதனையும் செய்யக்கூடியது என்பதை யாவரும் அறிவோம்.
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்ற வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்கா அரசு கூறியுள்ளது. உண்மையில் சிறிலங்கா அரசு தான் இழைத்த குற்றங்களை எப்போது ஒப்புக்கொண்டது? முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் சிறிலங்கா அரச படைகள் இழைத்த இனப்படுகொலைக் குற்றங்களை – சாட்சியங்களை – ஆதாரங்களை பார்த்தவர்களுக்கு சிறிலங்கா அரசு பூச் சுற்ற முடியாது. சிங்கள அரசு எதனையும் செய்யும். தமிழ் இனத்தையும் ஈழப் போராளிகளையும் அழிக்க சிங்கள அரசு எதனையும் செய்யும் என்பதே கடந்த கால வரலாறு.
இந்த விடயத்தில் முன்னாள் போராளிகள் இதனை இனம் சார்ந்த ஒரு பிரச்சினையாகவே கருத வேண்டும். இவ்வாறான செயல்கள் இடம்பெற்றதாக கூறப்படும் கருத்துக்கள் அழுத்தத்தையும் அச்சத்தையும் தருபவையே. அப்படி இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அவை முன்னாள் போராளிகளை மாத்திரம் பாதிக்கும் செயல் அல்ல. அது ஒட்டுமொத்த இனத்தையே – சந்ததியையே பாதிக்கும் செயல் என்பதே இங்கு முக்கியமானது. எங்கள் இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திக் களமாடிய எங்கள் தாயகப் புதல்வர்கள் நம்பிக்கையோடும் திடத்தோடும் இந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டும்.
தமிழவன், செண்பகம். 22.08.2016
