Designed by Iniyas LTD
ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை தாறுமாறாக விமர்சிக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.
ஜப்பானும், கொரியாவும் தங்
களது அணு ஆயுத உற்பத்தியை பெருக்கிக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என சமீபத்தில் குறிப்பிட்ட டிரம்ப், சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை தேடிக் கொண்டார். வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள 28 நாடுகளை சேர்ந்த அமைப்பான ‘நேட்டோ’ மீதும் சீறிப்பாய்ந்த டிரம்ப், இந்த அமைப்பே ‘வீண்’ என்று குறிப்பிட்டார். விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவு திரட்டிய அவர், முன்னர் செய்த குறைபாடுகளுக்கு அவர்கள் (நேட்டோ அமைப்பில் அமைந்துள்ள நாடுகள்) வருந்த வேண்டும், இல்லாவிட்டால் நேட்டோ அமைப்பையே கலைத்துவிட வேண்டும் என கூறினார்.
இதேபோல், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம், நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால் சவுதியிடம் யாரும் வாலாட்டுவதில்லை. ஆனால், இதற்கு நியாயமான கைமாறாக சவுதி நமக்கு ஒன்றுமே செய்வதில்லை. அவர்களுக்கு உதவிசெய்து, உதவிசெய்து நம்முடைய சட்டைதான் தளர்ந்துப் போகிறது (நாம் இளைத்துப் போகிறோம்) என டிரம்ப் குற்றம்சாட்டினார். இதேபோல், அண்டைநாடான மெக்சிகோவில் இருந்து இங்குவந்து குடியேறுபவர்கள் அமெரிக்காவின் செல்வத்தை எல்லாம் தங்கள் நாட்டுக்கு பணமாக அனுப்பி வருகின்றனர். இப்படி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள மெக்சிகோ நாட்டினரை வெளியேற்றியே தீருவேன் எனவும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
நான் அதிபராக பதவியேற்றால் முதல்வேலையாக அமெரிக்கா-மெக்சிகோ நாட்டு எல்லைப்பகுதியில் நிச்சயமாக ஆயிரம் மைல் நீளத்துக்கு மதில்சுவர் எழுப்புவேன் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதைப்போல், டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வெளியிட்டுவரும் கருத்துகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை பாதிப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஒபாமா கூறியதாவது:- டொனால்ட் டிரம்ப் மட்டுமல்ல, அதிபர் பதவிக்கு போட்டியிடும் டெட் க்ருஸ் போன்றவர்களும் தொடர்ந்து வெளியிட்டுவரும் கருத்துகளால் நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஐயங்களை சில வெளிநாட்டு தலைவர்கள் என்னிடம் எழுப்பியுள்ளனர். இதுபோன்ற கருத்துகளால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை நாசப்படுத்தப்படுகிறது.
சட்டப்பூர்வமாக இங்குவந்து குடியேறி உழைத்து சம்பாதிக்கும் மெக்சிகோ மக்கள் அந்த பணத்தை தங்களது குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கின்றனர். ‘வெஸ்டர்ன் யூனியன்’ போன்ற நிறுவனங்கள் மூலமாக மெக்சிகோ நாட்டுக்கு சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்யப்படுவதை கண்காணிக்கவும், தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் அங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பை தேடி அமெரிக்காவுக்கு வருகின்றனர். உலகை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளில் அமெரிக்க அதிபரும், அரசு அதிகாரிகளும் தலையிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தீவிரமாக ஆலோசித்து, தங்கள் நாட்டு பிரச்சனைகளை அமெரிக்கா தீர்த்துவைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப நாம் செயலாற்ற வேண்டியுள்ளது.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் இருந்து அரைவேக்காட்டுத்தனமான நடவடிக்கைகளை உலக மக்கள் விரும்ப மாட்டார்கள். நாமும் அதுபோல் நடந்துகொள்ள முடியாது. அவ்வகையில், டொனால்ட் டிரம்ப் போன்றவர்கள் பேசிவரும் கருத்துகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை நாசப்படுத்தப்படுகிறது. இதை அறிந்திருந்தும் அவர்கள் ஒரு அரசியல் ஆயுதமாக இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.