தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஓட்டுச்சாவடி நிலவரம் அறிய செல்போன் மூலம் புதிய திட்டம்

சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, ஓட்டுச்சாவடியில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது? என்பதை செல்போன் மூலம் தெரிந்து கொள்ளும் புதிய முறை சென்னையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  election

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  தமிழகத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 482 வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகளுக்காக கடந்த மாதம் 31-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் 32 மாவட்டங்களிலும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக 4 லட்சத்து 19 ஆயிரத்து 435 பேர் விண்ணப்பித்தனர்.   இதில் 864 பேர் ஆன்- லைனில் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு மாநிலத்தில் வேறு எந்த தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பது குறித்து கணினியில் ஆய்வு செய்த பின்னரே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.   புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வரும் மார்ச் மாதம் இறுதியில் வழங்கப்படும்.

வண்ணப்புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்களிடம் இருந்து ரூ.25 கட்டணத்தில் வாக்காளர் அட்டை வழங்குவதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து வரும் 6-ந் தேதி மீண்டும் ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தப்படவிருக்கிறது.   தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு பிறகு துணைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பொதுவாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க செலவு குறைவு என்பதால் பொதுமக்கள் இதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

போலி வாக்காளர்கள் பற்றி அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாகவே இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் போலி வாக்காளர்களை கணினி மூலம் கண்டறிந்து நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அரசியல் கட்சிகள் பொதுவாக புகார்களை தெரிவிக்காமல், போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள தொகுதி மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகளை ஆதாரத்துடன் சுட்டி காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு குறிப்பாக சென்னைக்கு 4 ஆயிரத்து 784 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேவைப்படுகிறது. இதில் 3 ஆயிரம் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மீதம் உள்ளவை பீகார் மாநிலத்திலிருந்து ஓரிரு நாட்களில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதேபோல் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் தமிழகத்துக்கு எப்போது வருகிறார்கள்? என்ற தகவல் நாளை (இன்று) தெரியவரும்.  ஓட்டுச்சாவடி மையத்தில் நீண்ட வரிசை இருந்தால் சிலர் வாக்களிக்காமல் திரும்பி விடுகிறார்கள். இதனை தவிர்த்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வரும் சட்டசபை தேர்தலில் சென்னையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாக்காளர்கள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் வாக்களிக்கும் ஓட்டுச்சாவடியில் கூட்டம் எவ்வளவு உள்ளது? வரிசையில் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை தெரிந்து கொள்வதற்காக, வாக்காளர்கள் தங்கள் செல்போனில் ‘கியூ’ என்று டைப் செய்து, சற்று இடைவெளி விட்டு தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, ‘1950’ என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், தங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள், எப்போது வந்தால் சீக்கிரமாக வாக்களித்துவிட்டு செல்ல முடியும் என்ற தகவலை பெற முடியும்.   முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை, சென்னையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...