Designed by Iniyas LTD
கச்சைதீவை மீட்டால் தான் மீனவர்களை பாதுகாக்க முடியும் – ஜெ
இலங்கைச் சிறையிலுள்ள 57 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடித் தளத்தில் இருந்து 6 மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, கல்பிட்டியாவுக்கு ஜூலை 4-இல் அழைத்துச் சென்றுள்ளனர். இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 2 படகுகளில் சென்ற 17 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த இரு சம்பவங்களில் பிடிபட்ட 23 பேர் உள்பட 57 மீனவர்களையும், இலங்கை வசமுள்ள 98 படகுகளையும் பாதுகாப்பாக விடுவிக்க உரிய நடவடிக்கையை எடுக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.உறுதியான நடவடிக்கை தேவை: பாரம்பரியமிக்க மீன்பிடி பகுதியான பாக். நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க வரலாற்று உரிமைகள் தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன.
1974-76ஆம் ஆண்டுகளில் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்திய-இலங்கை ஒப்பந்தங்கள் மூலம், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்த்ததே இதற்கு காரணமாகும்.இதனால், சட்டப்பூர்வ நிலையை கேள்விக்கு உள்ளாக்கியதால் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதில், தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டு விவகாரம் முடிந்து போனதாகக் கருத இயலாது.பாரம்பரியமான முறையில் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை அமைதியாக அமைத்துக் கொள்ள ஒரே வழி கச்சத்தீவை மீட்பதாகும்.இந்தப் பிரச்னைக்கு உறுதியான, நிரந்தரத் தீர்வைக் காண வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.