Designed by Iniyas LTD
கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த குஜராத் அணி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்சுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்தது. 
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் லயன்சை எதிர்கொண்டது. மும்பை அணியில் சுசித்துக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் குணால் பாண்ட்யா சேர்க்கப்பட்டார். ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட குணால் பாண்ட்யா, ஹர்த்திக் பாண்ட்யாவின் அண்ணன் ஆவார். குஜராத் அணியில், திருமண பந்தத்தில் இணைய இருக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக தவால் குல்கர்னி இடம் பெற்றார். டாஸ் ஜெயித்த குஜராத் கேப்டன் ரெய்னா, மும்பையை பேட் செய்ய பணித்தார்.
இதன்படி முதலில் பேட் செய்த மும்பை பேட்ஸ்மேன்களுக்கு, குஜராத் பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்து ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னிலும், ஹர்திக்பாண்ட்யா 2 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 16 ரன்னிலும், பொல்லார்ட் 1 ரன்னிலும், பார்த்தீவ் பட்டேல் 34 ரன்னிலும் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்பஜன்சிங் 8 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். 88 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை (15.5 ஓவர்) பறிகொடுத்து தத்தளித்த மும்பை அணிக்கு இறுதி கட்ட வீரர்கள் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினர். அம்பத்தி ராயுடு 20 ரன்களும், அறிமுக வீரர் குணால் பாண்ட்யா 20 ரன்களும் (11 பந்து, 3 பவுண்டரி, நாட்-அவுட்), டிம் சவுதி 25 ரன்களும் (11 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.
இவர்கள் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 61 ரன்களை திரட்டினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. குஜராத் தரப்பில் தவால் குல்கர்னி, பிரவீன் தாம்பே தலா 2 விக்கெட்டுகளும், ஜகாதி, பவுல்க்னெர், வெய்ன் பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து களம் இறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் குறிப்பிட்ட இடைவெளியில் பிரன்டன் மெக்கல்லம் (6 ரன்), கேப்டன் சுரேஷ் ரெய்னா (27 ரன்), தினேஷ் கார்த்திக் (9 ரன்), வெய்ன் பிராவோ (2 ரன்), அக்ஷ்தீப் நாத் (12 ரன்) உள்ளிட்டோர் அவுட் ஆகி வெளியேறினர். இதற்கிடையே பிஞ்ச், இந்த சீசனில் தொடர்ந்து 3-வது அரைசதத்தை கடந்தார்.
கடைசி 2 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் மெக்லெனஹான், குஜராத்தின் பவுல்க்னெர் (7 ரன்), பிரவீன்குமார் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்ததுடன், அந்த ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதி ஓவரில் குஜராத்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. ஆரோன் பிஞ்சும், தவால் குல்கர்னியும் களத்தில் நின்றனர். பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். இருவரும் இணைந்து முதல் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது.
கடைசி பந்தை சந்தித்த பிஞ்ச் பவுண்டரி அடித்து தங்கள் அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பிஞ்ச் 67 ரன்களுடனும் (54 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), தவால் குல்கர்னி 6 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப், புனே ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்த குஜராத் அணிக்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றியாக அமைந்தது. 3-வது லீக்கில் ஆடிய மும்பை அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.