தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கட்சியையும், ஆட்சியையும் மீட்க தர்மயுத்தம் தொடரும்!

201702241412445873_O-Panneer-Selvam-says-dharma-yuddham-will-continue-party-and_SECVPFஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏற்பாடு செய்த இந்த விழாவில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழா மேடையில் ஓ.பன்னீர்செல்வம் பற்றி, ‘‘மக்களின் முதல்வர்’, ‘ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசுடன் மல்லுக்கட்டிய மாவீரன்’ ஆகிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

ஜெயலலிதா படம் இடம்பெற்ற பேனரும், மற்றொரு பேனரில் ஜெயலலிதா- ஓ.பன்னீர்செல்வம் படமும் இடம் பெற்றிருந்தது.

விழாவுக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.

விழா மேடையில் மைத்ரேயன் எம்.பி., விழுப்புரம் எம்.பி. லட்சுமணன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விசுவநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ், மனோஜ் பாண்டியன், ஜே.சி.பி. பிரபாகர், முன்னாள் அமைச்சர் ஜெயபால், நடிகர்கள் ராமராஜன், தியாகு ஆகியோர் அமர்ந்திருந்தனர். பகல் 12.45 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் விழாமேடைக்கு வந்தார்.

தண்டையார்பேட்டையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில் திரண்ட தொண்டர்களை படத்தில் காணலாம்.

நிகழ்ச்சியில் வட சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொருளாளர் எம்.எம்.கோபி தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.

கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

கழகத்தின் ஆணிவேராக இருப்பவர்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். அவைத் தலைவர் மதுசூதனன் பேசியது போல நாம் தொடங்கியுள்ள தர்மயுத்தம் நிச்சயம் வெற்றி பெறும். தொண்டர்கள் துணையுடன் அந்த வெற்றியை எட்டிக் காட்டுவோம்.

தர்மயுத்தம் எப்போதுமே தோற்றதாக சரித்திரம் இல்லை. புரட்சித் தலைவி இன்று நம்மோடு இல்லை. ஆனால் அனைவரது மனங்களிலும் அவர் உயிரோடு இருக்கிறார். அவர் உயிருடன் இருந்த போது எனது பிறந்த நாளுக்கு என்னை யாரும் வீட்டுக்கு தேடி வர வேண்டாம். ஏழைகளின் இல்லத்திற்கு சென்று உதவிகளை செய்யுங்கள் என்று கட்டளையிட்டு இருந்தார். அதன்படி நாம் இன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆரின் வழியில் நின்று தமிழகத்தை காத்து வந்த ஜெயலலிதா, அவர்களின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர். கட்சியை வழிநடத்திய போது 16 லட்சம் தொண்டர்கள் கட்சியில் இருந்தனர். அதன்பிறகு 28 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதா 1½ கோடி தொண்டர்களை உருவாக்கினார்.

யாருடைய கையில், எந்த குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என்று அவர் நினைத்தாரோ அதற்கு மாறாக இன்று நடந்து விட்டது. கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது. அதனை மீட்டெடுக்கும் வரை தர்மயுத்தம் தொடரும். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும். அது உண்மையாக நடக்கும்.

சமீபத்தில் தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டரை பார்ப்பதற்காக நான் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது வயதான மூதாட்டி ஒருவர் ஓடி வந்து அம்மாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை நீங்கள்தான் வெளியில் கொண்டுவர வேண்டும் என்று மன்றாடி என்னிடம் கேட்டார்.

நான் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த போது அதற்கான உத்தரவை பிறப்பித்தேன். ஆனால் அதன் பின்னர் ஆட்சி கைவிட்டு போய் விட்டது. எனவே மத்திய- மாநில அரசுகள் நீதி விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளியே கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியையொட்டி காலையில் இருந்தே மேடையில் நடனக் கலைஞர்கள் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.

Comments
Loading...