Designed by Iniyas LTD
கனடாவில் தொல்.திருமாவளவனுக்கு விடுதலைப் பேரொளி விருது வழங்கப்பட்டுள்ளது
கனடா ஈழமுரசு சார்பில் நவம்பர் 26,2014 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா டோரன்டோவில் நடைபெற்றது. இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். டோரன்டோ நகரில் ஸ்கர்பரோ என்னுமிடத்தில் மெட்ரோபாலிட்டன் அரங்கில் இந்நிகழ்ச்சி நவம்பர் 26 அன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.நிகழ்ச்சியின் தொடக்கமாக கனடா நாட்டின் தேசியக்கொடி அரங்கில் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் தேசியக்கொடியை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும்,ஈழமுரசுவின் ஆசிரியருமான நிமிலரஞ்சன் ஏற்றிவைத்தார்.
பின்னர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிரம்மாண்டமான திருவுருவப்படத்தை ஏரளாமான குழந்தைகள் மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக மேடைக்கு எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.மேதகு பிரபாகரன் அவர்களின் போர் சாகசங்கள் அடங்கிய காணொளி ஒளிப்பரப்பட்டது. நிறைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக கனடா ஈழமுரசு சார்பில் அதன் ஆசிரியர் நிமிலரஞ்சன் அவர்களும் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களும் தமிழ்த்தேசியத்தின் அதிஉயர் விருதான ‘விடுதலைப் பேரொளி ‘ விருதினை வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
அடுத்து நவம்பர் 27 அன்று பிராம்டன் நகரில் உட்பிரிட்ஜ் என்னுமிடத்தில் நடைபெற்ற மாவீரர் நிகழ்ச்சிகளிலும் ,நவம்பர் 29 அன்று கியுபெக் மாநிலத்தில் மாண்ட்ரியல் என்னுமிடத்தில் நடைபெற்ற மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்விலும் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.