Designed by Iniyas LTD
கனடா தினக் கொண்டாட்டத்தில் தமிழ் அகதிப்படகு!
மொன்றியால் நகரில் இடம்பெற்ற கனடா தினக்கொண்டாட்டத்தில் சிறப்பு காட்சிப்பொருளாக தமிழ் அகதிப்படகு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டு அனைவரையும் பரவசப்படுத்தியுள்ளது.
கனடியத் தமிழர் பேரவையின் நாடு தழுவிய கனடாதினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த சனி மற்றும் ஞாயிறு படகுக் கண்காட்சி மொன்றியால் திருமுருகன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இதன்போது சிறப்பு காட்சிப்பொருளாக 86ஆம் ஆண்டு தமிழ் அகதிப் படகு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 86ஆம் ஆண்டு 155 தமிழ் அகதிகளையும் காப்பாற்றிய நியூபவுண்லாந்து மீனவர்களுக்கு அனைவராலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இந்த தமிழ் அகதிப் படகை மொன்றியால் நகருக்கு கண்காட்சியாக கொண்டுவரும் திட்டத்திற்கு நிதியுதவியுடன் ஆதரவளித்த கனடா மத்திய அரசாங்கத்திற்கும் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும், இப் படகானது மொன்றியால் நகரையடுத்து ஜூன் 27, 28ஆம் திகதிகள் கிங்ஸ்ரன் நகரிலும் கலை நிகழ்ச்சிகளுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் ஜூலை 01 ஆம் திகதி தலைநகரில் கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கும் கனடாவின் 150வது பிறந்த தினப் பெரும் கொண்டாட்டத்தையொட்டி, ஒட்டாவாவில் ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை தமிழ் கலை நிகழ்ச்சிகளுடன் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
கியூபெக், கனடா கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இரண்டு தினங்களாக கம்பீரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இப்படகினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கியூபெக் வாழ் மக்கள் திரண்டு வந்து கண்டு களித்துள்ளனர்.
நிகழ்வை சிறப்பிக்கும் வகையிலும், பார்வையாளரை கவரும் வகையிலும் கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெற்றன.
இந்த நிகழ்வில், Dollard-Des Ormeaux மேயரான Ed Janiszewski, கவுன்சிலர்கள் Colette Gauthier, Alex Bottausci and Morris Vesley ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
கனடியத் தமிழர் பேரவையின் முன்னாள் தலைவர் ராஜ் தவரட்னசிங்கம், மொன்றியால் அருள்மிகு திருமுருகன் மற்றும் ஆலய அறங்காவலர் தலைவர் வி.விஜயகாந்தன் ஆகியோரும் அங்கு உரையாற்றியுள்ளனர்.
இதேவேளை, தமிழ் அகதிப்படகின் பயணம் குறித்து ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் எழுதப்பட்டு நூல் வடிவில் அமைந்திருந்த விளக்கப் பிரசுரமும் அங்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.