Designed by Iniyas LTD
கமரூன் விஜயத்தை தொடர்ந்தும் அரசியல் தஞ்சம் கோரியவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் பிரித்தானியா!
கடந்த கார்த்திகை மாதத்தில் இலங்கைக்கு சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் நேரடியாகவே இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களைக் கண்டு வந்தார். இருப்பினும், அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகளை பிரித்தானிய அரசு தொடர்ந்தும் இலங்கைக்கு திருப்பி அனுப்புகின்றது.
கடந்த ஐப்பசி மாதம் முதல் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை தடுத்து வைத்து, துரிதமான முறையில் அவர்களது தஞ்சக் கோரிக்கைகளை நிர்ணயிப்பதுடன், அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதிலும் துரிதமாகவே பிரித்தானிய அரசு செயல்படுகின்றது.
கடந்த நான்கு மாதங்களில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த 14-02-2014 அன்று திருப்பி அனுப்பப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்கள் இலங்கை விமானநிலையத்தில் 12 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்கு வருமாறும் பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது பிரித்தானிய அரசால் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆறு தமிழ் இளைஞர்களான வினோதன் மோகன், கிருஷ்ணமேனன், சுப்பன் உதயகுமார், மற்றும் கௌரிசுதன் அழகரெத்தினம் ஆகியவர்களை திருப்பி அனுப்புவதற்காக நாள் குறித்து வைத்திருக்கிறது.
இவர்களில் கௌரிசுதன் அழகரெத்தினம் என்பவர் tooting வாழ் தமிழ் மக்களிடையே நன்கு அறியப்பட்டவர். இவர் தமிழீழம் சார்பாக பிரித்தானிய தமிழ் சமூகத்தினரால் நடத்தப்படும் சகலவிதமான நடவடிக்கைகளிலும் தீவிரமான ஈடுபாட்டுடன் செயல்படுபவர். இத்தகைய நபரை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால், இலங்கை அரசினால் இவருக்கு என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்டு இவரை திருப்பி அனுப்புவதை பிரித்தானிய அரசு எவ்வாறு நியாயப்படுத்த போகிறது?