Designed by Iniyas LTD
கர்நாடக சட்டப்பேரவை தீர்மானத்தால் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் உருவாகாது: பி.வி.ஆச்சார்யா
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானம் சரியானதாகும். இதனால் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் எதுவும் உருவாகாது என்று மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள வைஷ்ணவி அரங்கில் சனிக்கிழமை கர்நாடகமாநில விவசாயிகள் சங்கம் மற்றும் பசுமைப்படை சார்பில் நடந்த ‘காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், கர்நாடக அரசின் செயல்பாடும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருத்தரங்கில் கர்நாடக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கலந்துகொண்டு பேசியதாவது:
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானம் சரியானதாகும். இதனால் அரசியலமைப்புச்சட்டச்சிக்கல் எதுவும் உருவாகாது. சட்டப்பேரவை எடுக்கும் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு 3 பேர் கொண்ட இருக்கை முன்பு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, இது தொடர்பான உத்தரவு குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளது. தற்போதைய நிலையில் கர்நாடக அரசு சட்டச்சிக்கலில் சிக்கியுள்ளது. ஆனால் அதை திறமையாக கையாளவேண்டும். உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டால் அதை சமாளிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசு தடுமாறக்கூடாது.
கர்நாடகத்தில் தற்போதைய நீரின் அளவு, தமிழகத்தின் நீரின் தேவை குறித்து புள்ளி விவரங்களை எடுத்துவைத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாமைக்கான காரணத்தை விளக்கலாம். நீதிமன்றத்தின் நம்பிக்கையை இழக்கக்கூடாது.
மூத்த வழக்குரைஞர் ஃபாலிநாரிமன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தேவையற்றது. நாரிமன், மூத்த மற்றும் அனுபவ வழக்குரைஞர். உச்சநீதிமன்றத்தில் அவர் திறமையாக வாதாடியிருக்கிறார் என்றார் அவர்