Designed by Iniyas LTD
காணாமற் போனவனின் நினைவு: ஆதிலட்சுமி சிவகுமார்
விழிகள் கரைகின்றன
விரல்கள் நடுக்கமுறுகின்றன
தூக்கம் தொலைந்து இங்கே
வெகுநாட்களாகின்றன….
கண்களை மூடாமலே உன்முகம்
கண்களில் வழிகிறது
கடந்துபோன காலத்தின் ஒவ்வொரு
கணமும் மின்னலாக…….
நினைந்து நிதம் உருகி
நெஞ்சம் வெடித்துறைய
அடுத்தவர்கள் அறியாமல்
கிடக்கிறது என்துயரம்……..
புலம்பலென முகம்சுளிப்போர்
மத்தியிலே மனம் சிதற
பொத்திவைத்த கனவெல்லாம்
பொசுங்கிப் போனதடா மகனே…..
பாலைவனத்தினிலே
பூத்த ரோஜாவே பசும் தளிரே
பாசத்தை என்மீது பொழிந்தாயே
பார்த்தவிழி பூத்ததைநீ அறியாயே……
பொல்லாப்பு சொல்லுகிற
பொழுதெல்லாம் என்மனது
கல்லாக முடியாமல் அனலிடையே
புழுவாக துடிக்கிறது …..
எல்லோரும் வாழவேண்டும்
எனநினைத்தாய்
எல்லையற்ற கனவுகளை
நீ விதைத்தாய்……….
செருமுனையில் சென்று தன்
செல்வத்தை தேடிய தாயாக
இணையத்து படங்கள் எல்லாம்
உனைத்தேடி தோற்றுவிட்டேன்……
என்றும் உனைவிட்டு பிரியமாட்டேன்
என்றுரைத்த உன் வார்த்தை
பொய்யாகிப் போனதனால்
பொசுங்கிக் கிடக்கிறதென் பூஇதயம்….
என்சொல்வேன் செல்வமே
எடுத்தியம்ப வார்த்தை இல்லை
கல்லாக்கி வைத்தாலும் என்மனது
கரைகிறதே….கரைகிறதே…….
-ஆதிலட்சுமி சிவகுமார்
