DSC_7552-701549-450x300கிழக்கு மாகணத்திலுள்ள காணி, பொலிஸ் உட்பட அனைத்து அதிகாரங்களையும் கிழக்கு மாகாண சபையின் கீழ் கொண்டுவர வேண்டும்  என கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்த அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியான தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் உடனான சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் திருத்தத்தின் மூலம் அதிகாரப் பகிர்வாக கொண்டுவரப்பட்ட மாகாண சபைக்குரிய அதிகாரங்கள்இ கிழக்கு மாகாண சபைக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.

இதனால் பல அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதுடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு கொண்டுவருவதற்கு உடனடியாக நடவக்கை மேற்கொள்ள அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளான மக்களின் மீள் குடியேற்றத்தில், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்  சுனாமி, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான வாழ்வாதார திட்டங்கள் வெற்றியளிக்கவில்லையெனவும் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.