Designed by Iniyas LTD
காளைகளுடன் போராட்டம் நடத்திய 68 பேர் கைது!
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு, உச்சநீதிமன்றம் தடை போன்றவற்றால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். ஆனால் அது நடைபெறவில்லை.
இந்த ஆண்டும் மத்திய அரசின் முயற்சியால், ஜல்லிக்கட்டு நடைபெறும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். ஆனால் ஜல்லிககட்டு மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடு பிடிப்போர், காளை வளர்ப்போர் போன்றவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் புகழ் பெற்ற பகுதிககில் ஒன்றான அவனியாபுரத்தில் இன்று உச்சநீதிமன்ற அறிவிப்பை எதிர்த்து, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி, காளை வளர்ப்போர், மாடு பிடிப்போர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த அவனியாபுரம் பஸ் நிலையம் நோக்கி சென்றனர்
அப்போது அங்கு அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மாடு வளர்ப்போர் சங்க தலைவர் மாரி, மனோகரன் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் திருவள்ளுவர் சிலை முன்பு, இன்று ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடு பிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாடுபிடி வீரர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் தலைமையில் மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டக்காரர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.