தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காவிரிப் பிரச்னையில் ஒப்புக்கு அறிக்கைகள் விடும் திமுக, அதிமுக – வைகோ

காவிரிப் பிரச்னையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒப்புக்கு அறிக்கைகள் மட்டுமே விடுக்கின்றன. இந்தக் கட்சிகள் விவசாயிகளுக்காக ஒருபோதும் போராடவில்லை என, மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.VAIKO

சேலம் மாவட்ட மதிமுக செயலர் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன் இல்லத் திருமணம் விழாவில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது மதிமுகதான். இந்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் 1,000 பேரைத் திரட்டி தில்லியில் போராட்டம் நடத்திய கட்சியும் மதிமுகதான்.

ஆற்றில் அணை கட்டும் நடவடிக்கையைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தமிழகத்தில் ஐந்து கோடி பேர் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகும். மூன்று கோடி பேர் விவசாயத் தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுவர். காவிரி டெல்டா பகுதியில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகும்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஒப்புக்கு அறிக்கை விடுத்து வருகின்றன. இந்தக் கட்சிகள் விவசாயிகளுக்காக ஒருபோதும் போராடவில்லை.

அண்ணா காலத்தில் இருந்த திராவிட இயக்கக் கொள்கைகளை இந்தக் கட்சிகள் நீர்த்துபோகச் செய்துவிட்டன.

ஆனால், இதற்கு ஆரம்பத்திலிருந்தே மதிமுக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. தமிழக மக்களின் எதிர்ப்புகளை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் மார்ச் 11-ஆம் தேதி வடசென்னை துறைமுகம் பகுதியில் உள்ள சுங்க இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் பெருந்திரளான விவசாயிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

தி.மு.வளர்ந்ததுசேலத்தில்தான்

சேலத்துக்கும், திராவிட இயக்கங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. திராவிடர் கழகம் வேரூன்றியது சேலத்தில்தான். திமுக முக்கிய இயக்கமாக வளர்ந்ததும் சேலத்தில்தான். அதுபோல திமுக மாணவரணிச் செயலராக நான் பொறுப்பு வகித்தபோது, சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா முன்னிலையில் பேசிய பேச்சுதான் என்னை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மனங்களில் கொண்டுபோய் சேர்த்தது.

அதேபோல, ஒரு மாநாட்டில் திமுக தலைவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, சிலர் கூட்டத்துக்கு மத்தியில் எழுந்து நின்று முழக்கங்கள் எழுப்பி குழப்பம் விளைவித்த வண்ணம் இருந்தனர். ஆனால், அதைப் பற்றி கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் கருணாநிதி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். திமுக தலைவர் கருணாநிதி ஒரு தனிச் சிறப்பு ஆற்றல் மிகுந்தவர். கூட்டத்திலோ, மாநாட்டிலோ அவர் பேசிக்கொண்டிருக்கும்போது எவ்வளவு பெரிய இடையூறு ஏற்பட்டாலும், கூட்டத்தினர் எழுந்துச் சென்றாலும் கூட பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் கருணாநிதி என்றார் அவர்.

Comments
Loading...