Designed by Iniyas LTD
காவிரி மேகேதார் அணை தொடர்பாக மோடிக்கு ஓ. பன்னீர்ச்செல்வம் கோரிக்கை
கர்நாடக அரசு காவிரியில் மேகேதாது என்ற இடத்தில் அணை கட்டாமல் தடுக்க வேண்டுமென்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று ஓ. பன்னீர்செல்வம் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி, மத்திய அரசு, காவிரி தீர்ப்பாயம், தமிழக அரசு ஆகியவற்றின் அனுமதியையும் பெறாமல் மேகேதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது என்ற முடிவில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த அணைக்கென விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றில் நீர் மின் திட்டம் உள்பட எந்தத் திட்டத்தையும் தமிழக அரசின் அனுமதியின்றி அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இம்மாதிரி திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என இதற்கு முன்பாக ஜெயலலிதா எழுதியிருந்த கடிதத்தையும் பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேகேதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
காவிரி அரசின் இந்த முடிவு, காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை மீறிய செயல் என்றும் தமிழக அரசைக் கேட்காமல் எந்தத் திட்டத்தையும் காவிரியின் குறுக்கே துவங்கக்கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டுமென்றும் பன்னீர்செல்வம் தன் கடிதத்தில் கோரிக்கைவிடுத்துள்ளார்.
தவிர, காவிரி நீர் தீர்ப்பாயத்தின் உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவையும் காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.