Designed by Iniyas LTD
காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுகவே: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
காவிரி பிரச்னையில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுகவே என்றார் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில்:
காவிரி பிரச்னை பல ஆண்டு காலமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு, தமிழ் சமுதாயத்துக்கு துரோகம் செய்ய மாட்டோம் என மிகவும் தெளிவாகத் தமிழைக் கூறி ஆட்சிக்கு வந்தது திமுக. ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழர்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளது திமுக. மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதல் காவிரி பிரச்னையையும் தீர்க்காமல் இருந்துள்ளது. மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியுடன் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகத் தமிழகத்துக்கு மாநிலத்தில் ஆட்சி செய்த திமுக துரோகம் செய்துள்ளது. மாநிலத்தில் ஆளமுடியாத நிலையில் இருந்த போதுகூட மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக உறவு வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்தது.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவினர் துரோகம் செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசை குற்றம்சாட்டுகின்றனர். யாரெல்லாம் நமக்கு துரோகம் செய்திருக்கின்றனர் என்பதை வெள்ளை அறிக்கையாக விவசாய சங்கங்கள் கேட்க வேண்டும்.
தமிழகத்துக்குக் காவிரி நீர் தேவை. மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதில் மாறுபட்ட கருத்து இல்லை. காவிரியில் எந்த அளவுக்கு நீர் கிடைக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு நாங்கள் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறோம். காவிரியில் நீர் வரும். ஒரு மாத காலத்துக்குள் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பாஜகவின் ஆட்சிக்காலம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. அதன் பின்னரும் பாஜக ஆட்சிக்கு வரும். ஆனால் இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குள் காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுப்பது பாஜகவின் கடமை.
காவிரி பிரச்னையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட திமுகவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. அவர்கள் ஆட்சி காலத்தில் செய்த தவறுகளுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு, அதன்பின்னர் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். இந்தக் கூட்டத்துக்கு திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அல்லது கூட்டணியில் இடம் கிடைக்காதா என ஏங்குபவர்கள்தான் செல்வர். மூன்று தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை மத்திய தலைமை இறுதி செய்து விரைவில் அனுப்பி வைக்கும்.
இந்தத் தேர்தலில் கடந்த முறை நிகழ்ந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுக்க தேர்தல் அலுவலர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணம் பட்டுவாடாவை தடுக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகள் மீறப்படும் சூழ்நிலையில் மீண்டும் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டக்கூடாது என்றார் ராதாகிருஷ்ணன்.
அப்போது, மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஆர். இளங்கோ, பொதுச் செயலர் யு.என். உமாபதி, செயலர் ஜெய் சதீஷ், எம்.எஸ். ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.