Designed by Iniyas LTD
காவிரி விவகாரம் : மத்திய அரசு மவுனம் கலைக்க தமிழக கட்சிகள் கோரிக்கை
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விட கர்நாடகா மறுத்துள்ள விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் கலைக்க வேண்டும் என, தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி ஆணையிட்ட போதிலும், கர்நாடக அரசு அதை ஏற்கவில்லை என கூறியிருக்கிறார்.
கர்நாடக அரசியல் கணக்குகளை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு மவுனம் காப்பதாக ராமதாஸ் சாடியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை திரும்பி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீரை கால அட்டவணைப்படி கர்நாடக அரசு வழங்குவதற்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைந்து அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.