Designed by Iniyas LTD
கிரானைட் முறைகேடு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம்: ஐகோர்ட்
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த சட்ட ஆணையர் சகாயத்தை, ஐகோர்ட் நியமித்தது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் முதல் விசாரணையைத் தொடங்கிய சகாயமும், அவரது குழுவினரும் 20 கட்டங்களாக தீவிர விசாரணை நடத்தினர். ஐகோர்ட் விதித்த காலக்கெடு முடிவடைந்ததால் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு சகாயம் கூடுதல் அவகாசம் பெற்றார்.
தற்போது இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள சகாயம் குழு, சின்னமலம்பட்டி அருகே பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தாரால் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்தியது. அங்குள்ள உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நாள் நெருங்கிய நிலையில், கிரானைட் முறைகேடு குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை எனக்கோரி சகாயம் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
மேலும், சகாயத்துக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் நரபலி தொடர்பான புகாரை காவல்துறையினர் தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.