Designed by Iniyas LTD
கிளிநொச்சியிலிருந்து நல்லிணக்கத்துக்கான நடைபயணத்தை தொடர்ந்த உயர்தர மாணவர்கள்
பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை நோக்கி உயர்தர மாணவர்கள் இருவரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து இராண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மட்டக்களப்பு புனித மிக்கேல் பாடசாலை மாணவர்களால் நேற்று முந்தினம் இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நடைபயணம் நேற்று பிற்பகல் கிளிநொச்சியை சென்றடைந்திருந்த நிலையில், மீண்டும் அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கிளிநொச்சியிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து நேற்று காலை 6.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை நிறைவடையவுள்ளது.
இம்மாணவர்களின் நடைபயணத்திற்கு பலரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தி வருவதுடன் பயணத்தின் நடுவே அவர்களை சந்தித்து தமது மகிழ்ச்சியினையும் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் நிலவிய இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை மற்றும் பாதுகாப்பு அற்ற நிலை காரணமாக சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த பாதுகாப்பற்ற நிலை தற்போது இல்லை என்பதனை அறிவித்தல் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.