தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் கசிப்பு அருந்துவதால் ஏற்படும் அநியாய மரணங்கள்!

IMG_4354_CI

போரின் பின்னர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி அதிகரித்துக் காணப்பட்டது. அண்மைய காலத்தில் கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் கசிப்பு உற்பத்தியும் பாவனையும் அதிகரித்துள்ளது. இதனால் பல இளைஞர்கள் சட்ட விரோத மதுபானமான கசிப்பிற்கு அடிமையாகியுள்ளனர். அத்துடன் சமூகத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் நிலையை கசிப்பு உற்பத்தி தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளான மர்தபுரம், புளியம்பொக்கனை, கண்டாவளை, குஞ்சுப் பரந்தன், அக்கராயன், மணியங்குளம், வன்னேரிக்குளம் போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் கசிப்பு உற்பத்தி இடம்பெறுகின்றது. அத்துடன் கஞ்சா போன்ற சட்டவிரோத போதைப் பொருட்களின் பாவனையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவைகளால் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் சமூகப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

அண்மையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் 55 வயதான குடும்பஸ்தர் ஒருவர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தினமும் கசிப்பு அருந்தும் பழக்கமுடையவர் என்றும் அதனால் இவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பல மரணங்கள் கிளிநொச்சியில் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினமும் கசிப்பு அருந்தும் பழக்கமுடையவர்களின் உடலின் பாகங்கள் மிக விரைவாக செயலிழப்பதுடன் சாதாரண காய்ச்சலைக்கூட தாங்க முடியாது மரணமுறுகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சியில் 50 வயது முதல் 60 வரையானவர்கள் இவ்விதம் மரணடைவதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் அவர்களின் குடும்பம் அனாதரவு நிலையை அடைய நேரிடுகின்றது.

மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்தப் பாதகமான பானத்தை விடியற் காலையிலேயே அருந்திவிட்டே பலர் வேலைக்குச் செல்கின்றனர். இது சமூகத்தை பல்வேறு வகையிலும் பாதிக்கின்றது. இந்த விடயத்தில் மதுவரித் திணைக்களத்தினரும், பொலிஸாரும் அசமந்தமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கசிப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் சுதந்திரமாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமைக்கு உரித்தான மதுவரித் திணைக்களம் தடுக்குமா? அநியாய மரணங்கள் தடுக்கப்படுமா? உயிர்கள் காக்கப்படுமா?

Comments
Loading...