தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கில் ஆணைக்குழு விசாரணை 54பேருக்கு அழைப்பு.

download (2)

காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது அமர்வு, ஏறாவூர்ப்பற்றிலுள்ள, செங்கலடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஆரம்பமானது. இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்காக 54 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முதலாவது விசாரணையாக இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த செங்கலடியைச் சேர்ந்த சிவராசா மரியதாஸ் என்பவரின் மனைவி 33வயதான கலைச்செல்வி
யுத்தம் முடிந்த பின்னர் 2009 ஆண்டு காணாமல் போன தனது கணவரை ஜனாதிபதி ஆணைக்குழு எப்படியாவது கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அவர் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
சம்பவ தினமான 2009.06.18 அன்று செங்கலடியிலுள்ள பாடசாலையில் வைத்து பெரிய புல்லுமலை அகதிகளை மீளக் குடியேற்றும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அதனைப் பார்ப்பதற்காக எனது கணவர் அம்மன் புரம் செங்கலடியிலுள்ள எனது வீட்டிலிருந்து செங்கலடிப் பாடசாலைக்குச் சென்றிருந்தார். அங்கு வைத்தத்தான் அவர் கடத்தப்பட்டிருந்தார். அவரைக் கடத்திக் கொண்டு போகும் போது அங்கு மீள்குடியேற்றத்துக்காக நின்றவர்கள் கண்டிருக்கின்றார்கள். அப்போது அம்மாவிடம் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டே சென்றிருக்கின்றார். கொண்டு போனவர்கள் யாரென்று தெரியாது.
காணாமல் போய் மூன்றாம் நாள்தான் அவர் கடத்தப்பட்டிருக்கிறார் என்று தகவல் அறிந்தேன்.

அதுவரை அவர் உறவினர்களிடம் சென்றிருப்பார் என்று நினைத்திருந்தேன். இரண்டு பேர்தான் கடத்திப் போயிருக்கின்றார்கள். எப்படிப்பட்ட ஆட்கள் என்று தெரியாது.
என் கணவருக்கு எவரும் எதிரிகளும் இல்லை. அவர் ஒரு மீனவர். நான் சிறீலங்கா காவல்துறையிலும் முறைப்பாடு செய்தேன்.

அதேவேளை மட்டக்களப்பிலுள்ள ஒவ்வொரு படை முகாமாகச் சென்று எனது கணவரின் படத்தைக் காட்டி அவரைக் கண்டீர்களா என்று படையினரிடம் கேட்டேன். அவர்கள் எவரும் என் கணவரைக் காணவில்லை என்றுதான் சொன்னார்கள். இதுவரை என்கணவர் என்ன ஆனார் என்று தெரியாது இங்குள்ள படையினரும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கதறி அழுதார்.

என் கணவரை யார் கடத்தினார்கள் என்று நீங்கள் தான் கண்டு பிடித்துத் தரவேண்டும். நான் எனது குழந்தைகளை என் தாயின் பராமரிப்பில் விட்டு விட்டு மத்திய கிழக்குக்கு இரண்டு வருடம் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று விட்டுத் திரும்பியிருக்கின்றேன். எனக்கு  யதுஷிகா என்ற 14 வயது மகளும் , வினிராஜ் என்ற 12 வயது மகனும் , றிங்கேசன் என்ற 08 வயது மகனும் இருக்கின்றார்கள். ஓலைக் குடிசையில்தான் வாழ்கின்றேன். இப்பொழுது எனது நாளாந்த ஜீவனோபாயத்திற்கு பெரும்பாடு படுகின்றேன். எனது கணவரைக் கண்டு பிடித்துத் தாருங்கள் என்றார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோறளைப்பற்று தெற்கு கிரான், மற்றும் வாகரை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுக்கான விசாரணைகள் இன்று , கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...