Designed by Iniyas LTD
குடிதண்ணீரின்றி தவிக்கும் மக்கள்: 3 நாட்களுக்கு ஒரு தடவை கிடைக்கும் 5 லீற்றரில் வாழ்க்கை
கிளிநொச்சி இரணைதீவில் குடியமர்ந்துள்ள மக்கள் குடிதண்ணீர் வசதியின்றிப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். போர் காரணாமாக இரணைதீவு மக்கள் கடற்படையினரால் கட்டாயத்தின் பெயரில் அப்புறப்படுத்தப்பட்டு இரணை மாதா நகரில் தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டனர்.
குடியமர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகியும், பூர்விகக் கிராமமான இரணைதீவில் தாங்கள் குடியேற்றப் படவில்லை என தெரிவித்து, பல நாள்கள் போராட்டத்தை மேற்கொண்டு இறுதியில் அரச அனுமதி இன்றி 200 படகுகளில் இரணைமாத நகரில் இருந்து இரணை தீவில் சென்று தாமாகக் குடியேறினர்.
-மீள் குடியேறி ஒரு வருடம் கடக்கப் போகின்ற நிலையில், இன்னும் மக்களை எவரும் திரும்பிப் பார்க்கவில்லை. குடி தண்ணீர் வசதியோ, போக்குவரத்து வசதியோ, மருத்துவ வசதியோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் அனைத்துக் கிணறுகளில் உள்ள தண்ணீர் உவர் தண்ணீயாக காணப்படுவதால், கடற்படையினரால் மூன்று நாள்களுக்கு ஒரு முறை குடும்பம் ஒன்றிற்கு 5 லீற்றர் தண்ணீர் வழங்கப்படுகின்றது. அதுவும் எப்போதாவது ஒரு முறை வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் அவசர நிலமையோ அல்லது திடீர் சுகயீனம் ஏற்படும் போது முதலுதவியோ அவசர சிகிச்சையோ வழங்குவதற்கான எந்த ஏற்பாடும் செய்து தரப்படவில்லை. முழுமையாக மின்சார வசதி இல்லாமையால் இரவு நேரங்களில் தொழிலுக்கு செல்வதற்கும் இரவு நேரங்களில் நடமாடுவதற்கும் அச்சத்தில் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் குறைகளை கேட்பதற்கு அரச அதிகாரிகளோ, கிராம அலுவலகர்களோ இரணைதீவுக்குள் வருவது குறைவாகவே காணப்படுகிறது. தற்காலிகக் கொட்டில்களில் வசிக்கும் நாம், பூர்வீக கிராமத்தில் குடியேறி விட்டோம் என்ற ஒரே ஒரு மகிழ்ச்சியில் ஏனைய அனைத்து துன்பங்களையும் தாங்கி வாழ்ந்து வருகின்றோம். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு வீடுகளை அமைத்து தராவிட்டாலும், அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்தி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



