Designed by Iniyas LTD
குடித்து கும்மாளமடித்து சல்லாபத்தில் இருந்த கருணா அரசியல் பேசுகின்றார்- சரத்பொன்சேகா
கருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கியதாகவும், அந்தப் பணத்தில் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமடித்து வாழ்ந்து வந்ததாகவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சரத் பொன்சேகா இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளின் அடியின் பின்னர் அவருக்கு போக்கிடமிருக்கவில்லை என்றும், சுங்கிவில பக்கம் சிங்களக் கிராமத்திற்கு அருகில் மிகச்சிறிய முகாம் ஒன்று அமைத்துக்கொண்டு கருணா இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முகாமில் 75 பேர்வரையான உறுப்பினர்களோடு கருணா இருந்ததாகவும் , அவர்களில் 50 பேர் வரையானவர்கள் 12 வயதிற்கும் குறைவானவர்கள் எனவும் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.
அதன்பின் தாம் கருணாவை கொழும்புக்கு அழைத்து சென்று பாதுகாப்பு கொடுத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
யுத்தம் முடிந்த நாளிலிருந்து கொழும்பிலுள்ள இரவு களியாட்ட விடுதிகளில் வெவ்வேறு இனப் பெண்கள், சில அரசியல்வாதிகளின் செயலாளர்கள் போன்றவர்களுடன் தான் கருணாவின் வாழ்க்கை கழிந்ததாகவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் இங்கிலாந்தில் இருந்த அவரது மனைவி பிள்ளைகளைக் கூட கருணா கைவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து சல்லாப வாழ்க்கைதான் நடத்திக்கொண்டிருந்த கருணா இப்ப அரசியல் கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டதாகவும் சரத் கூறியுள்ளார்.
மேலும் 2004ஆம் ஆண்டுக்கு முன் இருந்த கருணா குறித்தும் கருணா தற்போது தானே ஞாபகப்படுத்துகின்றார் என்றும், எனினும்,
கருணா கிழக்கிலிருந்து பாய்ந்து வந்தபின் 2004 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த கருணாபோல ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருணாவிற்கு இருந்த ஒரே தொடர்பு பிள்ளையான் மட்டுமே எனவும், இப்பொழுது கருணாவும் பிள்ளையானும் வெவ்வேறு அணிகளின் எதிரிகள் என்றும், கருணா என்கின்ற மனிதர் சொல்லக் கூடியளவிற்கு பெரிய ஆளாக இப்போதில்லை என்றும், அவர் சல்லாபத்தில் திளைத்த ஒரு நபர் மட்டுமே எனவும் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.
அதோடு தற்போது அவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர் என்றும், மேல் இருந்து கீழே வந்த ஏனைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் கருணாவிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் சரத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போது தன்னுடைய பிம்பத்தை பெருக்குவதற்காகத்தான் பொட்டம்மான் உயிரோடு நோர்வேயில் இருக்கின்றார் என்பது போன்ற கருத்துக்களை கருணா கூறிவருகின்றதாகவும் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
அதோடு இதைத் தவிர கருணாவுக்கு வேறு திறமையோ அல்லது ஏதாவது சிறியளவிலான ஓர் இயக்கத்தை உருவாக்கி நடத்துவதற்கான ஆற்றலோ ஏதுமில்லையெனவும் சரத்பொன்சேகா இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.