Designed by Iniyas LTD
குடியேற்றத் தொழிலாளர்கள் பிரிட்டனுக்குள் வருகின்ற போக்கை ஒழிக்கவேண்டும்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனுக்குள் குடியேறிகள் வருவதைக் குறைப்பதற்கான அடிப்படை மாற்றங்களை உள்ளடக்கிய பரிந்துரைகளை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அறிவித்துள்ளார்.
அரசின் சமூகநலக் கொடுப்பனவுகளால் ஈர்க்கப்பட்டு குடியேற்றத் தொழிலாளர்கள் பிரிட்டனுக்குள் வருகின்ற போக்கை ஒழிக்கவேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உரையொன்றில் பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான கொடுப்பனவுகள், குடியிருப்புக் கொடுப்பனவுகள், வருமான வரி விலக்குக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட தொழில்சார் நலன்களை அனுபவிப்பதற்கு குடியேறிகள் குறைந்தது 4 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய குடியேறிகள் பிரிட்டனுக்குள் வருவதற்கு முன்னதாக, தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் கேமரன் கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து வந்து தொழில்தேடுவோர் 6 மாதகாலத்தில் தொழிலைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அவர்களின் நாட்டுக்கே அனுப்பப்பட வேண்டும் என்றும் டேவிட் கேமரன் தெரிவித்தார்.
குடியேறிகளுக்கு உதவுவதற்கு பிரிட்டன் கடமைப்பட்டுள்ளது என்று கூறியுள்ள பிரதமர், குடியேற்றங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் நியாயமாக அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் குடியேறிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிவருகின்ற வலதுசாரி (யூகிப்) ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் அண்மைய இடைத்தேர்தல் வெற்றிகள், பிரதமர் கேமரன் மீது கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர் உள்ளார்.
குடியேறிகளின் வருடார்ந்த நிகர எண்ணிக்கையை ஒரு லட்சத்துக்கு கீழே குறைப்பதாக டேவிட் கேமரன் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்கின்ற விமர்சனங்களும் அவர் மீது உள்ளன.