Designed by Iniyas LTD
கூட்டமைப்பினை சந்திக்கிறார் சுஷ்மா சுவராஜ்!
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்குவருகை தந்த இந்திய வெளிவிவகாரஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று சனிக்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்தவுள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகளையும் சுஷ்மா சுவராஜ் இன்றைய தினம் சந்தித்து பேச்சு நடத்தவுள் ளார்.
நேற்று இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். அத்துடன் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 9 ஆவது அமர்விலும் சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துயைாடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துதல் பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாகவும் அதில் இந்தியாவின் வகிபாகம் குறித்தும் புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்துகொண்டிருக்கும் மீனவர் பிரச்சினை குறித்தும் விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படும் பொருளாதார தொழில்நுட்ப உறவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் இரு நாட்டு பல் துறைசார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 9 ஆவது அமர்வு கொழும்பில் நேற்று வௌ்ளிக்கிழமை நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் நடைபெற்ற இந்த இந்த கூட்டு ஆணைக்குழு அமர்வின்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம் சுற்றுலாத்துறை சக்தி வளத்துறை தொழில்நுட்பம் கடல்மார்க்க பாதுகாப்பு கூட்டுறவு சமூகம் கலாசாரம் பாதுகாப்பு ஒத்துழைப்பு மக்கள் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியாலையில் மருத்துவ உபகரண பிரிவு நிர்மாணத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று சந்தித்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது அரசியல் தீர்வு விவகாரம் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
ஏற்கனவே இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இந்தியா முழுமையாக எம்முடன் இருக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் மற்றும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவரின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பன தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் வலியுறுத்துவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
அந்தவகையில் இன்று சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள சந்திப்பு முக்கியத்துவமிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய வெ ளியுறவு அமைச்சருக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையும் முக்கியத்துவமிக்கதாக அமைந்துள்ளது. குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரம் என்பன தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இருதரப்பு உறவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுசெல்வது குறித்தும் இதன்போது ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்புகளின் பின்னர் யாழ்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கும, இந்திய நிதிவுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்படும் வீட்டு திட்டங்கள் உள்ளிட்ட இந்திய அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக சென்று பார்வையிடவும் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை இந்திய வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.