Designed by Iniyas LTD
கூரியர் வேனை மடக்கி 2.72 கோடி கொள்ளை!
மராட்டிய மாநிலத்தில் பணம் ஏற்றிச்சென்ற கூரியர் வேனை வழிமறித்து ரூ.2.72 கோடி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 1.24 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம், அமராவதி மாவட்டத்தில் இருந்து கடந்த மூன்றாம் தேதி 2 கோடியே 72 லட்சம் ரூபாயுடன் தனியாருக்கு சொந்தமான கூரியர் வேன் மும்பை நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜால்னா மாவட்டம் வழியாக சென்றபோது இரு வாகனங்களில் ஆயுதங்களுடன் பின்தொடர்ந்துவந்த ஏழுபேர் கொண்ட கும்பல், ஷெல்கான் என்ற இடத்தின் அருகே அந்த வேனை வழிமறித்து மடக்கியது.
வேனின் டிரைவர் மற்றும் பாதுகாவலரை தாக்கிவிட்டு உள்ளே இருந்த பணத்தை அள்ளிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளையர்களில் ஐந்துபேரை நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கோடியே 24 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
பிடிபட்டவர்கள் அளித்த தகவலின்பேரில் தலைமறைவாக இருக்கும் மேலும் இரு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.