Designed by Iniyas LTD
கூலித்தொழிலாளியின் மகள் மருத்துவம் படிக்க மனமுள்ளவர்கள் முன்வாருங்கள்
மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி முதல் சென்னை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது நாளாக கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று முன்தினம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான இடங்கள் காலியாகிவிட்டன. அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரிகளில் நேற்று பிற்பட்டோருக்கான இடங்கள் முடிந்துவிட்டன.
முன்னதாக நேற்றைய கலந்தாய்வில் பிற்பட்டோருக்கான பிரிவில் கூலித்தொழிலாளியின் மகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. அந்த மாணவியின் பெயர் பிரியதர்ஷினி. இவர் தந்தை ரெங்கநாதனுடன் கலந்தாய்வுக்கு வந்திருந்தார். இவருக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது.
மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்ததில் தந்தையும், மகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.ரெங்கநாதன் கூறும்போது, ‘‘எனது மகள் டாக்டருக்கு படிக்கப் போகிறாள் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதற்கான பணத்தை எப்படியாவது கஷ்டப்பட்டு கட்டவேண்டுமே’’ என்றார். மாணவி பிரியதர்ஷினி கூறியதாவது:- நான் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவள். எனது தந்தைக்கு 3 மகள்கள். நான் தான் மூத்தவள்.
நான் எனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். அதன்பின்னர் தர்மபுரியில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். எனக்கு 10-ம் வகுப்பு படித்து முடித்ததுமே டாக்டராக வேண்டும் என்ற லட்சியம் உருவானது. அது நிறைவேறும் வகையில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஒருபுறம் இது மகிழ்ச்சியாக இருந்தாலும், எனது தந்தையால் இந்த கட்டணத்தை செலுத்த முடியுமா? என்று வருத்தமாக இருக்கிறது.
என்னுடைய தந்தை ரெங்கநாதன் கூலித்தொழிலாளி. அவரால் எனது கல்விக் கட்டணத்தை கட்டுவது மிகவும் சிரமம். எனவே என்னுடைய கல்விச்செலவை யாராவது மனமுவந்து ஏற்க முன்வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு பிரியதர்ஷினி தெரிவித்தார்.