![sri]()
எமது மக்களின் காணிகள் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிற்குள் தொடர்ச்சியாக இருந்துவரும் நிலையானது நல்லாட்சி அரசுக் கோட்பாட்டிற்கு எதிர்மறையான இயல்புகளையே வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் உபயோகப்படுத்தி வருகின்ற வற்றாப்பளை கோப்பாப்பிலவு வீதி புனரமைப்பு தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்பிளவினூடாக வற்றாப்பளை செல்கின்ற மூன்று கிலோ மீற்றர் வரையான வீதி, மீள்குடியேற்றம் இடம்பெற்று ஆறு வருடங்கள் கடந்தும் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாது இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் காப்பெட் வீதியாக தரமுயர்த்தப்படவுள்ளது.
இவ்வீதியானது மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாத நிலையில் இப்பகுதி மக்கள் தமது போக்குவரத்துத் தேவைகளிற்காக செப்பனிடப்படாத பாதுகாப்பற்ற இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள மாற்று வழியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வற்றாப்பளையில் இருந்து கோப்பாப்பிலவு வரையான வீதி புனரமைக்கப்பட்டதன் பின்பு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டு பொதுமக்களின் சுமூகமான போக்குவரத்திற்கும் அனுமதிக்கப்படல் வேண்டும்.
மேலும், கோப்பாப்பிலவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள், பாடசாலை, பொதுமண்டபம், கோயில்கள், வீதிகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக காணப்படும் பெருமளவான நிலப்பரப்புக்களும் விடுவிக்கப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் இயல்பு வாழ்க்கை வாழ வழியேற்படுத்தப்பட வேண்டும்.
எமது மக்களின் காணிகளும், நிலங்களும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிற்குள் தொடர்ச்சியாக இருந்துவரும் நிலையானது, நல்லாட்சி அரசுக்கோட்பாட்டிற்கு எதிர்மறையான இயல்புகளையே வெளிப்படுத்துகின்றது. இந்த நிலையானது தமிழ் மக்களின் மனங்களில் அரசாங்கம் மீதான அதிருப்தி அலைகளினை தோற்றுவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.