Designed by Iniyas LTD
கொல்லப்பட்ட படையினரின் நினைவு தினம் பலாலியில்!
கொல்லப்பட்ட படையினரின் நினைவு தினம் பலாலியில்!
யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் நினைவு தினம் யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் முப்படைகளதும் அணிவகுப்பு மரியாதையுடன் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகமும் பலாலி படைத்தலைமையகமும் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஐினோல்ட் கூரே பிரதம விருந்தினராகக் கலந்த கொண்டு உயிரிழந்த படைவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்த கொண்டிருந்த வடக்கு மாகாணத்தின் இரானுவ, கடற்படை, விமானப்படைகளின் தளபதிகளும் மற்றும் காவல் துறை அதிகாரிகளும் அரச அதிகாரிகளும் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர்.
மதத் தலைவர்களின் ஆசியுரையுடனும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதைகளுடனும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந் நிகழ்வில் வரவேற்புரையை வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதனும் நன்றியுரையை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனும் ஆற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட முப்படைகளைச் சேர்ந்த படைவீரர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதே வேளை கடந்த காலங்களில் மே 18 யுத்த வெற்றிவிழாவாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் அதனை படையினரை நினைவுகூரும் நாளாக மாற்றியிரந்தது. அதற்கமைய இந்த முறை மாகாண ரீதியாக இந் நிகழ்வை நடாத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றது.
