Designed by Iniyas LTD
கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். ரயில் டிக்கெட்டிற்கான கட்டணம் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ரூ.14,600 கோடி செலவில், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
வண்ணாரப்பேட்டை – சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-வது வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும் சார்நிலைக் கடனாக 5 சதவீதமும் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும், சார்நிலை கடனாக 5.78 சதவீதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவீத நிதி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது.
சோதனை ஓட்டம்: கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் பல்வேறு கட்டங்களில் கடந்த 3 மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் தண்டவாளங்களின் உறுதி மற்றும் சிக்னல், மின்னோட்டம் ஆகியவையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் மெட்ரோ ரயில் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி பார்க்கப்பட்டது.
கட்டுப்பாட்டு அறையும் தயார்: சென்னையில் இயங்கும் அனைத்து மெட்ரோ ரயில்களும் கோயம்பேடு கட்டுப்பாட்டு அறையில் இருந்தே இயக்கப்படும். ரயில்கள் மட்டுமல்லாமல் மெட்ரோ ரயில் நிலையங்களும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும்.
மெட்ரோ ரயில் ஓட்டுநருக்கு தண்டவாளம் மற்றும் பயணிகளை கண்காணிப்பதே பிரதான வேலை. தண்டவாளத்தில் எந்த குறுக்கீடு வந்தாலும் மெட்ரோ ரயில் தானாகவே நின்றுவிடும்.
கட்டணம் நிர்ணயம்: மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கடுத்து ரூ.20, ரூ.30, ரூ.35, ரூ.40 என்ற அடுக்கில் கிலோ மீட்டருக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். மெட்ரோ ரயில் பயணத்துக்கு டோக்கன், ஸ்மார்ட் கார்டு என இரு வகையான டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய சலுகையுடன் கூடிய சீசன் டிக்கெட் வழங்கப் படமாட்டாது என்றும் கூறப்படுகிறது.