Designed by Iniyas LTD
கௌதாரிமுனை சின்ராசுவின் ஒரு நாள் இப்படித்தான் கழிகிறது!

கொளுத்தும் வெயில். சுடு மண்ணில் செருப்பணியாத வெறும் கால்கள். உழைத்துக் களைத்த தேகம். ஒடுங்கிய தேகம். வெயிலில் கருகிய முகம். நின்று பதில் சொல்ல முடியாத அவசரம். இப்படித்தான் நடந்துசென்றார் சின்னராசு.
பூநகரி – யாழ்ப்பாண வீதியிலிருந்து கௌதாரி முனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. பேருந்து எதுவும் இல்லை. எப்போதாவது வரும் எதோ ஒரு வாகனத்தில்தான் செல்லலாம் என்றார்கள் வழியில் தென்படும் சிலர்.
நடந்து பார்க்கலாமே என்ற முயற்சியில் நடந்தேன்.
முடியவில்லை. கொளுத்தும் வனாந்தர வெம்மை. ஒரு குட்டிப் பூவரசு நின்றது. அதற்குள்ளும் கொஞ்ச நிழல். அதைவிட்டால் நீண்ட தூரத்திற்கு மரங்கள் எதுவும் இல்லை. அதற்குள் அமர்ந்தால்தான் வெயிலில் இருந்து தப்பலாம்.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் லாவகமாக படுவேகமாக சின்ராசு நடந்து வந்தார். அவரை கொளுத்தும் வெயில் ஒன்றும் செய்துவிடவில்லை. செருப்பற்ற அவரது கால்களை கொதிக்கும் மண்ணும் ஒன்றும் செய்துவிடவில்லை.
இருட்டுடன் எழுந்து கடலுக்குச் செல்வார். அங்கு மீன்களை பிடித்து வீடு திரும்ப எட்டு மணிக்கு மேல் ஆகும். கௌதாரிமுனையிலிருந்து பூநகரி வீதி பதினைந்து கிலோமீற்றர் வரும். அங்கிருந்து கால்நடையாக வருவார்.
மீன்களை சந்தையில் விற்றுவிட்டு மீண்டும் கால்நடையாக கௌதாரிமுனைக்குச் செல்வார். “அய்யா இப்பிடி நடந்துபோனால் எத்தினை மணிக்கு கௌதாரி முனை போவியள்” என்று கேட்டேன்.
”இப்ப என்ன நேரம்?”
”பத்தரை”
”ஒரு பன்னிரண்டே முக்காலுக்குப் போயிருவன்” என்றார் அநாயாசமாக…
கிட்டத்தட்ட ஐந்து மணித்தியால நடை..
இப்படித்தான் சின்ராசுவின் ஒவ்வொரு நாளும் கழிகிறது.
கடலுக்கு ஒருநாளைக்கு செல்லாவிட்டால் அடுப்பு எரியாது. சிலவேளை மீனுடன் பூநகரி வாடியடிக்கச் சென்றாலும் மீன் நல்ல விளைபோகாது. கொதிக்கும் வெயிலில் வீடு திரும்பும் இந்த மனுசனுக்கு எப்படி இருக்கும்?
வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள். மனைவிக்கும் நிறைய வருத்தங்கள். இது இல்லை… அது இல்லை.. என்று வீட்டுத்திட்டமும் கொடுக்கவில்லை. தற்காலிக வீடு ஒன்றில்தான் இந்த சின்ராசுவின் குடும்பத்தின் வாழ்க்கை.
”சைக்கிள் இல்லையா அய்யா” என்றேன். ”இல்லை தம்பி… ஒரு சைக்கிள் இருந்தால் ஓடிவந்து மீனைக் குடுத்திட்டு போகலாம்” என்றார் சின்ராசு.
சோழர்கள் தமது ஆட்சிக்காலத்தில் கௌதாரிமுனையை முக்கியப்படுத்தியிருந்தனராம். அதற்கு அதன் நில அமைப்புத்தான் காரணமாம். கௌதாரிமுனை முழுவதும் சோழர்கால நாணயங்கள் புதைந்திருக்கின்றனவாம். அங்குள்ள மக்களின் முகங்கள் மிகவும் வித்தியாசமானவை.
அவர்கள் சோழர்களின் தனித்துவமான எச்சமாகவும் இருக்கலாம். கடல் கடந்து சென்று கடாரம் வென்ற சோழரின் மண்ணில் கொளுத்தம் வெயிலில் வெறும்கால்களுடன் நடக்கிறார் கௌதாரி மண்வாசி சின்ராசு.
மண் வீதியில் வெயிலையும் மழைச் சேற்றையும் கடப்பது அவ்வளவு எளிதல்ல. கடலில் நீந்தியே இன்னொரு நாடு செல்வது போலத்தான் சின்ராசுவின் ஒவ்வொருநாள் பயணமும். இவருக்கு ஒரு சைக்கிள் இருந்தால் கௌதாரிமுனையிலிருந்து பூநகரிக்கு திரும்பும் அவரது பயணம் வெகு சுலபமாகும்.
இது வழியில் சந்தித்த தனியொரு சின்ராசுவின் கதை மாத்திரமே!
– பார்த்தீபன்