Designed by Iniyas LTD
சசிகலாவை சந்திக்க சிறை செல்லும் அமைச்சர்கள்!
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 14-ம் தேதி அன்று தீர்ப்பளித்தது. 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பின்னர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேச தமிழக அமைச்சர்கள் இன்று காலை பெங்களூரு புறப்பட்டு சென்றனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க ஏற்கனவே சென்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும்
செல்லூர் ராஜூ உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய பதிவு
அமைச்சர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என கர்நாடக சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் தெரிவித்து இருந்தார்.
சசிகலா உள்ளிட்டோரை சந்திப்பது தொடர்பாக ஏற்கனவே சிறை அதிகாரிகள் சார்பில் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சிறைத்துறை விதிமுறைகளின் படி சசிகலாவை சந்திக்க வாரத்துக்கு 2 முறை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க முடியும். அதுவும் முறையான ஆவணங்களை தாக்கல் செய்த பிறகு குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேச அனுமதிக்கப்படும்.
அதே வேளையில் சிறைக்கு முதல்வரோ, அமைச்சர்களோ வருவதாக இருந்தால், சிறைத்துறை மேலிடம் மட்டுமல்லாமல் மாநில உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது.
சசிகலாவை சந்திக்க அவரது உறவினர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். கட்சியினரோ, பிற பொதுமக்களோ வாய்ப்பு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.