Designed by Iniyas LTD
சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் – சுப்பிரமணிய சாமி
சசிகலா பொதுச்செயலாளராக உள்ள அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கட்சியும், ஆட்சியும் ஒரே இடத்தில் இருக்கவேண்டும் என்ற கோரிக்கையானது மூத்த தலைவர்களால் வைக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி எழுந்தது. ஓ.பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அவர் பதவியேற்க இருந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர் பக்கம் சென்றனர். அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்தது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு சென்றார். பழனிசாமி தலைமையில் புதிய அரசு பொறுப்பு ஏற்றது. இதற்கிடையே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியது. தேர்தல் ஆணையமும் விளக்கம் கோரியது.
இருதரப்பும் இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் என கூறி வருகிறது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்நிலையில் சசிகலா பொதுச்செயலாளராக உள்ள அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.