Designed by Iniyas LTD
சட்டக் கல்லூரிக் கட்டடத்தை இடித்துத் தகர்க்க அரசு எடுத்திருக்கும் அதிர்ச்சி அடைகிறேன் – வைகோ
சென்னை மாநகரத்திற்கு அழகூட்டும் கட்டடங்கள்தான் உயர்நீதிமன்றமும், அதனைச் சார்ந்து இருக்கின்ற டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியும் ஆகும். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அமைந்து இருப்பதால்தான் சட்டக்கல்லூரி மகத்துவத்தையும் மதிப்பையும் பெற்று இருக்கின்றது. 1899 முதல் 116 ஆண்டுகளாகத் தற்போதுள்ள கட்டடத்தில் இயங்கி வருகின்றது. ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு என்று கூறி, சட்டக் கல்லூரிக் கட்டடத்தை இடித்துத் தகர்க்க அரசு முடிவு செய்து இருப்பதாக அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைகிறேன்.
எக்காரணத்தை முன்னிட்டும் சட்டக்கல்லூரிக் கட்டடத்தை இடிக்கக் கூடாது.நியாயமான கோரிக்கைக்காக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்துத் தடியடி நடத்திய காவல்துறையின் அடக்குமுறை கண்டனத்திற்கு உரியதாகும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் எங்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்றைய காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்தும், சட்டக்கல்லூரியை இட மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும் அறவழியில் போராடி வருகிறார்கள்.
ஆனால், சட்டக்கல்லூரிக் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தற்பொழுது கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து இருப்பது சரியான அணுகுமுறை அல்ல.
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி தொடர்ந்து அதே இடத்தில் இயங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
05.02.2015 மறுமலர்ச்சி தி.மு.க