Designed by Iniyas LTD
சட்டியிலை இருந்தால்தானே அகப்பையிலை வரும்?

மார்கழிப் பனி நாவல் மரத்தடியை சில்லென ஆக்கியது. கூதலில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்ட காதலர்களைப் போல நெருங்கியிருந்தன இரு காகங்களும். குளிரை போக்க சுருட்டை ஒருமுறை உள் இழுத்தார் இரத்தினத்தார்.
“உந்தப் பொடியள் இன்னும் வரேல்லையே…” கையில் பத்திரிகைகளுடன் வந்து சேர்ந்தார் சண்முகத்தார். அவர் வந்த கையுடன் இலட்சுமனனும் உருத்திரனும் சைக்கிளை விட்டு இறங்கி வந்து மதவில் அமர்ந்து கொண்டனர்.
இரு நாட்களாக வெளிவரும் செய்திகள் எல்லாமே எல்லோருக்கும் பெரும் கவலையை உண்டு பண்ணியிருந்தது. இரத்தினத்தார் மௌனமாயிருந்தார். “இப்பவெல்லாம் நள்ளிரவிலை செய்தியலை வெளியிடுகிறதே ஒரு ஸ்டைலாய்ப் போச்சுது..” முதலில் மௌனத்தை கலைத்தான் உருத்திரன்.
“அதென்னெண்டால் பாரடா.. இண்டைக்கு ஜோசப் பரராஜசிங்கத்தை அவையள் கொலை செய்த நாள்தானே. அதை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை மைத்திரி தந்திருக்கிறார்…” முகம் சிவக்கச் சொன்னார் இரத்தினத்தார்.
“உங்களுக்கு இன்னுமொரு விசயம் தெரியுமே?..” சண்முகத்தார் வாய் திறந்தார். எல்லோரும் என்ன? என்பதைப் போல முகத்தை சண்முகத்தின் பக்கம் திருப்பினர். “செய்தி அறிவிச்ச உடனம் ஆமி யாழ்ப்பாணத்திலை வெடி கொளுத்திச்சினமாம்..” சண்முகத்தார் எரிச்சலுடன் சொன்னார்.
“கொலை இராணுவத்திற்கு கொளுத்த வெற்றிதானே..” என்றான் இலட்சுமணன்.
“2016இலை தீர்வு வரும் தீர்வு வரும் எண்டு சம்பந்தன் அய்யா கண்ணை மூடிக் கொண்டு வடக்கு கிழக்கு எல்லாம் சொல்லித் திரிஞ்சார்… அவையள், தாங்கள் ஆர் எண்டுறதை காட்டுறவிதமாய் ஒரு தீர்ப்பு சொல்லியிருக்கிறாங்கள்..” சண்முகத்தாரின் முகம் இரத்தினத்தாரின் சொற்களை கேட்டு வாடிற்று.
“சிங்கள அரசு, சிங்கள அரசுதான்..” என்றான் உருத்திரன். “பிறகென்னடா.. தமிழ் சனங்களை அழிக்கிறதும், தமிழ் மக்களின்டை விடுதலைக்காய் ஒலிக்கிற குரல்களை ஒடுக்கிறதும்தானே சிங்கள இராணுவத்தின்டை பணி…” எல்லோரும் இரத்தினத்தாரைப் பார்த்தபடியிருந்தனர்.
இரத்தினத்தார் தொடர்ந்தார். “பிறகு, தங்கடை கடமையளை நிறைவேற்றுதுக்காக அந்த அரசே அவையளை தண்டிக்குமே? பிறகு ஆமி வெடி கொளுத்தி, எங்களை சீண்டுவான்தானே..,” முடித்தார் இரத்தினத்தார்.
“அவன் வெடி கொளுத்தினாலே அது விளங்குது..” உருத்திரனின் குமுறலை புரிந்த விதமாய் தலையசைத்தார் சண்முகத்தார்.
”நிறைய ஆதாரங்கள் இருந்தும், கொலைக்குப் பயன்படுத்தின துவக்கு கருணா குழுவுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் குடுத்தது எண்டு தெரிஞ்சும், இதிலை சிங்கள புலனாய்வாளர்களும் கருணா குழுவும் தொடர்பு எண்டு தெரிஞ்சும் சிங்கள ஜூரிகள் ஏழு பேரும் குற்றவாளியளை விட்டிருக்கினம். குற்றவாளியளை தப்ப விட்டிருக்கினம்…” என்றான் உருத்திரன்.
“இது என்ன புதுசே? குமரபுரம் படுகொலையிலை 26 தமிழர்களை படுகொலை செய்த குற்றவாளியளை நல்லவையள் எண்டு தீர்ப்பளிச்சு விடுவிச்சவைதானே… ” இது சண்முகத்தார்.
“இப்பிடியே இனக்கொலை படுகொலை பயிலுகளை மூடுவாங்கள்..” என்றான் இலட்சுமணனன்.
“இந்த விசித்திரத்திலைதான் போர்க்குற்ற விசாரணை நடத்தப் போறினமாம்..” நக்கலாகச் சிரித்தார் இரத்தினத்தார்.
“சிங்கள நீதி மன்றத்திலை எங்களுக்கு எப்ப நீதி கிடைச்சிருக்குது? நீதி கிடைச்சிருந்தால்,? நாங்கள் அழிக்கப்பட்டிருக்கவும் மாட்டம்.. சிங்கள அரசுக்கு எதிராய் துவக்கு எடுத்திருக்கவும் மாட்டம்…” சினத்துடன் சொன்னான் இலட்சுமணன்.
“எங்களுக்கு நடந்த அநீதியளுக்கு சிறிலங்கா அரசாலை நீதியை தர ஏலாது எண்டுறதை நல்லா தெளிவாய் சொல்லியிருக்கினம்.. இதை நாங்கள் உலகத்துக்குச் சொல்ல வேணும்.. ஆனால் எங்கடை ஆக்கள் அவையின்டை காலை தடவிக் கொண்டெல்லே இருக்கினம்..” என்றபடி சண்முகத்தாரின் முகத்தைப் பார்த்தார் இரத்தினத்தார்.
“சிங்கள அரசை நம்பிக் கொண்டிருந்தால், முள்ளிவாய்க்காலிலை தமிழ்ச் சனம் ஒண்டும் சாகேல்லை.. சிங்களப் படையள் எல்லாம் நல்ல போர் சாதனையாளர்கள் எண்டு சிங்கள நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்..” என்றான் உருத்திரன்.
“எங்களுக்ககாக செத்த சனங்களுக்கு நீதி வேணுமடா… சிறிலங்கா நீதிமன்றத்திலை நீதியை நாங்கள் எதிர்பாத்தாலே.. அது அநீதிதான்டா.. சட்டியிலை இருந்தானே, அகப்பையிலை வரும்..” என்றபடி எழுந்தார் இரத்தினத்தார்.
கூர்ந்து கவனித்த காகங்களில் ஒன்று மற்றையதைப் பார்த்து “குற்றவாளியளை தண்டிக்க வெளிக்கிட்டால், எல்லா இராணுவத்தையுமெல்லோ தண்டிக்கோனும்… முழுபேருக்குமே கொலைதானே வேலை…” என்றது. மற்றைய காகம், “மைத்திரியும் மகிந்தவும் சந்திரிக்காவும் பிறகு தூக்கிலை எல்லோ தொங்கோனும்..” என்று நக்கலாகச் சொல்ல இருகாகங்களும் சிரித்தபடி பறந்தன.
– நாவலடித் தம்பி –