Designed by Iniyas LTD
சம்பந்தரின் 2016 சித்திரை திருநாள் வாக்குறுதி காற்றில் பறந்தது!
கடந்த வருடம் சித்திரை திருநாளில் ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் வழங்கிய வாக்குறுதி ஆண்டு ஒன்று கழிந்த நிலையில் காற்றில் பறந்துள்ளது. தமிழ் மக்களின் வாழ்வில் யோகம் பிறக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்று இரா சம்பந்தன் கடந்த வருடம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். ஆமாம், தமிழ் மக்களுக்கு இந்த கடந்த ஆண்டு பல்வேறு யோகங்களை அளித்துள்ளது.
எங்கள் மக்கள் தெருவுக்கு வந்திருப்பதுதான் முதல் யோகம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுதலை செய்யக் கோரியும் அவர்களின் உண்மை நிலையினை அறிவிக்குமாறு கோரியும் ஈழத் தமிழ் மக்கள் தெருவில் கிடந்து போராடுகிறார்கள். அந்த மக்களின் வாழ்வில், எதிர்பார்ப்பில், போராட்டத்தில் எந்த விதமான நல்ல சமிக்ஞைகளும் இல்லாது அவர்கள் தொடர்ந்தும் வீதியில் வாழ்கிறார்கள். மக்களோ வீதிக்கு வந்துவிட்டார்கள். எதிர்கட்சித் தலைவருக்கு அது குறித்து கிஞ்சித்தும் சிரக்தை இருப்பதைப்போல தெரியவில்லை.
அது மாத்திரமின்றி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் 56ஆவது நாளாகவும் தெருவில் வாழ்கின்றனர். தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவில் உள்ள முல்லைத்தீவு பிரதான படைமுகாம் முன்பாக அந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இம்முமுறை சித்திரை திருநாளை கறுப்பு பண்டிகையாக அந்த மக்கள் அனுஷ்டித்துள்ளனர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என பலதரப்பட்டவர்களும் கறுப்பு ஆடைகளை அணிந்து வீதியில் நின்று நிலத்திற்காக குரல் எழுப்புகின்றனர்.
கடந்த காலங்களைவிடவும் இம்முறை சித்திரைப் புத்தாண்டு ஈழத்தில் களையிழந்துபோயிருப்பதாக ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. தமிழ் மக்களின் மனங்களின் ஏற்பட்ட சோகமும் தீராக் காயங்களுமே இதற்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நிலமை இவ்வாறு இருக்க இம்முறை சித்திரை திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ரீலங்காவின் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இது நல்லிணக்கத்திற்கான ஆண்டு என்று பிரகடனம் செய்திருப்பதுதான் இன்னும் வேடிக்கையானது.
ஜெனீவாவில் சிங்கள அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வாங்கிக் கொடுத்திருப்பது சம்பந்தர் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்த மற்றுமொரு யோகமாகும். இதன் மூலம் இனப்படுகொலை விவகாரத்தை சர்வதேச அளவில் நீர்த்துப் போகச் செய்திருப்பதுடன் இனப்படுகொலைக்கான நீதியை வழங்கும் ஸ்ரீலங்காவின் பொறுப்பை இல்லாமல் செய்துள்ளார். சிங்கள அரசைப் பொறுத்தவரையில் எஞ்சிய இரண்டு ஆண்டு கால ஆட்சியை எந்த விதமான தடையுமின்றி மேற்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
சிங்கள அரசு பொறுப்புக் கூறும் அரசு, நீதியை வழங்கும் அரசு என்று சம்பந்தர் எந்த அடிப்படையில் நம்புகிறார்? தமிழ் மக்களை காலம் காலமாக சிங்கள அரசுகள் மாத்திரமின்றி, சிங்கள அரசுகளுடன் இணைந்து தமிழ் தலைவர்களும் ஏமாற்றினார்கள் என்பது வரலாறு. சம்பந்தரும் அந்த வரலாற்றுக் கடமையை ஆற்றுவதையே கண்டுகொள்ள முடிகிறது. 2016இல் அரசியல் தீர்வு என்றும் 2016இல் தமிழ் மக்களுக்கு விடிவு என்றும் சம்பந்தர் விட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்த கதைகளையும் ஈழச் சமூம் அறியும்.
இந்த நிலையில் சம்பந்தர் பதவி விலக வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். பதவி விலகுவது சரியான முடிவல்ல என்றும் பதவியில் இருந்துகொண்டே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்றும் கூறியிருப்பது அவர் எத்தகைய பதவி வெறியில் உள்ளார் என்பதை காட்டுகிறது. ஒரு சிங்கள எதிர்கட்சித் தலைவர்போல இருப்பேன் என்று எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற போது வழங்கிய வாக்குறுதியை மாத்திரம் சம்பந்தர் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
எனவே, சம்பந்தர் போன்ற தமிழ் மிதவாத தலைமைகளை தமிழ் சமூகம் புறக்கணிப்பதுடன் உரிய பாடங்களை புகட்ட வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் கண்ணீருடன் விளையாடும், ஈழச் சமூகம் சந்தித்த இனப்படுகொலையுடன் விளையாடும் இத்தகையவர்களின் செயற்பாடுகளுக்கு தக்க பதில் அடி கொடுக்க வேண்டிய காலம் நெருங்குகிறது. அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் உரிமையையும் நீதியையும் பெற புதிய வழிமுறைகளில் பிரவேசிக்க வேண்டியதொரு அவசியத்தையும் காற்றில் பறக்கும் வாக்குறுதிகள் வலியுறுத்தி நிற்கின்றன.
ஆசிரியர்,
செண்பகம்.
15.04.2017