Designed by Iniyas LTD
சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ரிது ராணி ஓய்வு பெற்று விட்டார்
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரிது ராணி கடந்த ஆகஸ்டு மாதம் பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கான வீராங்கனைகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஒழுங்கீன நடவடிக்கையாக அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்கிடையில் தற்போது போபாலில் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
இதற்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த ரிது ராணி முகாமில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ஆக்கியா இந்தியா அமைப்பின் தலைவர் நரிந்தர் பத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ரிது ராணி ஓய்வு பெற்று விட்டார். இதனால் தன்னால் தேசிய பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இயலாது என்று எங்களுக்கு இ–மெயில் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறார். அவரது ஓய்வு முடிவை மதிக்கிறோம்.
ஆக்கிக்கும், நாட்டுக்கும் அவர் செய்து இருக்கும் சேவைக்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என்றார். ரிது ராணி தலைமையில் தான் இந்திய பெண்கள் ஆக்கி 36 ஆண்டுகளுக்கு பிறகு ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. அவரது தலைமையில் 2014–ம் ஆண்டில் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2013–ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கமும் இந்திய அணி வென்றது. ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கப்பட்ட ரிது ராணி கடந்த ஆகஸ்டு 18–ந் தேதி பாட்டியாலாவை சேர்ந்த பஞ்சாபி பாடகர் ஹர்ஷ் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.