தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக சுவிட்சர்லாந்தின் இன்பான்டினா

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக சுவிட்சர்லாந்தின் இன்பான்டினா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமம் மற்றும் போட்டி ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டதில் கிளம்பிய அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) நிர்வாகிகளின் தலைகள் உருண்டன. குறிப்பாக 5–வது முறையாக ‘பிபா’ தலைவராக தேர்வு செய்யப்பட்ட செப் பிளாட்டர் (சுவிட்சர்லாந்து) நெருக்கடி காரணமாக சில நாட்களிலேயே பதவியை துறந்தார்.International

மேலும் ‘பிபா’ நிதியை தவறாக பயன்படுத்தியதாக செப் பிளாட்டருக்கும், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தலைவரான பிரான்சை சேர்ந்த மைக்கேல் பிளாட்டினிக்கும் கால்பந்து நடவடிக்கைகளில் பங்கேற்க 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை பிடிக்க ஷேக் சல்மான் பின் இப்ராகிம் அல்–கலிபா (பக்ரைன்), கியானி இன்பான்டினோ (சுவிட்சர்லாந்து), பிரின்ஸ் அலி பின் அல்–ஹூசைன் (ஜோர்டான்) ஜெரோம் சாம்பேஜ் (பிரான்ஸ்), டோக்கியோ செக்ஸ்வாலே (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் விண்ணப்பித்தனர்.

புதிய தலைவர் தேர்வு

இந்த பரபரப்பான சூழலில், விளையாட்டு உலகில் செல்வாக்கு மிக்க பதவியான ‘பிபா’ தலைவருக்கான தேர்தல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்று நடந்தது. கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து செக்ஸ்வாலே விலகிக் கொண்டார். இதனால் 4 பேர் இடையே போட்டி நிலவியது. மொத்தம் 207 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தனர். வெற்றிக்கு, மொத்தமுள்ள ஓட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 130 ஓட்டுகள் பெற வேண்டும். ஆனால் முதலாவது ரவுண்டில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக இன்பான்டினோ 88 ஓட்டுகளும், ஷேக் சல்மான் 85 ஓட்டுகளும் பெற்றனர். இதைத் தொடர்ந்து 2–வது சுற்றுக்கு சென்றது.

இந்த சுற்றில் மொத்த ஓட்டில் சரிபாதிக்கு மேல் அதாவது 104 ஓட்டுகள் பெற வேண்டும். இதன் அடிப்படையில் மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. இதில் கியானி இன்பான்டினா 115 ஓட்டுகள் பெற்று அபார வெற்றி பெற்றார். ஷேக் சல்மானுக்கு 88 ஓட்டுகளும், பிரின்ஸ் அலிக்கு 4 ஓட்டுகளும் கிடைத்தன. சாம்பேஜிக்கு எந்த ஒட்டும் கிடைக்கவில்லை. ‘பிபா’வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இன்பான்டினாவுக்கு வயது 45. சுவிட்சர்லாந்தின் கால்பந்து நிர்வாகி. இவர் இத்தாலி வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...