Designed by Iniyas LTD
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: இங்கிலாந்து வீரர் பீட்டர்சன்
லண்டன் : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் அறிவித்துள்ளார்.
முன்னாள் வீரர்கள் பாய்ச்சல் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மண்ணை கவ்வியது. 5 டெஸ்டுகளிலும் தோற்று ‘ஒயிட் வாஷ்’ ஆனதால் இங்கிலாந்து மீது விமர்சன கணைகள் பாய்ந்துள்ளன. குறிப்பாக இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனை முன்னாள் வீரர்கள் குறை சொல்லி வருகிறார்கள். டெஸ்டில், ஒரு நாள் போட்டி போன்று இங்கிலாந்து அணி முட்டாள்தனமாக ஆடி விட்டது. நேர்த்தியான பந்து வீச்சை எதிர்கொள்ள களம் இறங்கும் போது, பொறுமையுடனும், கவனமுடன் செயல்ட வேண்டும். ஆனால் பீட்டர்சன் அதை செய்யவில்லை’’ என்று முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் தாக்கினார்.
பீட்டர்சன் மறுப்பு : அடுக்கடுக்கான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் 33 வயதான கெவின் பீட்டர்சன், கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் முடிவுக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பீட்டர்சன், ஓய்வு எண்ணம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0–5 என்ற கணக்கில் இழந்ததும், தனிப்பட்ட முறையில் நான் நிறைய ரன்கள் குவிக்காததும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் தரமான அணிக்கு எதிராக, கடினமான ஒரு சுற்றுப்பயணாக இது அமைந்து விட்டது. ஆஷஸ் தொடரின் போது எங்களுக்கு முழுமையாக ஆதரவு தந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 2015–ம் ஆண்டு நடக்கும் ஆஷஸ் கோப்பையை மீண்டும் எங்கள் அணி வெல்வதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆஷஸ் தொடரில் பீட்டர்சன் 5 டெஸ்டையும் சேர்த்து 294 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிக ரன்கள் எடுத்தவர் இவர் தான். அவருக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். ஆஷஸ் தோல்விக்கு பீட்டர்சன் மீது மட்டும் பழிபோடக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாகனின் பயம் : வாகன் கூறும் போது, ‘பீட்டர்சன் மிகச்சிறந்த வீரர். அவர் இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி களை இழந்து விடும். ஆனால் அவரை பலிகடாவாக்கி விடுவார்களோ? என்று அஞ்சுகிறேன். ஏனெனில் அவரை கழற்றி விட வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், இது மட்டுமே ஒரே வழி. அப்படி செய்தால் அது மிகப்பெரிய தவறான அணுகுமுறையாக இருப்பது மட்டுமின்றி, இங்கிலாந்து அணிக்கும் இமாலய இழப்பாக அமையும். எனவே இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது ஒன்றும் கால்பந்து விளையாட்டு அல்ல. உடனே உலகத்தரம் வாய்ந்த 4–வது வரிசை பேட்ஸ்மேனை வாங்கி விட முடியாது. அவருக்கு மேலும் பொறுப்பை அளிக்கும் வகையில் அவரை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும். இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.இங்கிலாந்து வீரர்களில் ஒட்டுமொத்தத்தில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 4–வது இடம் (104 டெஸ்டில் 8181 ரன்) வகிக்கும் பீட்டர்சன், தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.