Designed by Iniyas LTD
சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு ‘தமிழீழத்தின் காவலர்கள்” என்று துண்டுபிரசுரம் வெளியீடு.

“அன்பான தமிழ் மக்களே இன்றைய காலம் சுதந்திரத்திற்கான போராட்ட பயணத்தில், அகிம்சைப் போராட்டத்திற்கான காலம் என்றவாறு தொடரப்பட்டு ,தமிழீழத்தின் காவலர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள் சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.
சர்வதேச மகளிர்தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், உலகிலே பெண்களின் உரிமைகள் எவ்வளவு மதிக்கப்படுகின்றன என்ற கேள்வி எம்முன்னே எழுவதை தவிர்க்கமுடியாதுள்ளது. மனிதஉரிமைகளில் மிகவும் முன்னேற்றம் அடைந்த நாடுகளில் கூட பெண்கள் முழுமையாக விடுதலை அடைந்துள்ளனர் என அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையே காணப்படுகிறது.
பல நாடுகளில் பெண்ணியமும், பெண்விடுதலையும் செயல்வடிவமற்ற மிகப்பெரும் பேசுபொருளாக உள்ளது. உலகின் நிலை இவ்வாறாக உள்ள போதும் மறுபுறத்தே தமிழீழ அரசு நடைமுறையில் இருந்தபோது பெண்ணுரிமை விடயத்தில் உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்த நாடு.
தமிழீழ அரசில் பெண்ணுரிமை விடயத்தில் பேச்சிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட செயல்வடிவத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. தமிழீழஅரசிலேயே பெண்களின் உரிமைகள் முழுமையாக பேணப்பட்டதுடன் பெண்விடுதலை என்ற பெயரில் பெண்கள் தவறான வழிகளுக்கு இட்டுச்செல்லப்படாத ஓர் நடுவு நிலமை காணப்பட்டது. இதேவேளை பெண்ணுரிமை விடயத்தில் பின்தங்கிநிற்கும் ஆசியநாடுகளுக்கிடையில், ஏன் உலகநாடுகளுக்கிடையிலும் தமிழீழம் ஓர் அதிசய நாடாகவே விளங்கியது.
ஆயினும் தமிழீழம் சிங்களப்படைகளினால் வன்பறிப்புக்குள்ளாக்கப்பட்டபின் நிலமை தலைகீழாக மாறிவிட்டது. பெண்ணுரிமை என்பது கால்களில் போட்டு மிதிக்கப்பட்டு வருகின்றது. பெண்களின் இயல்பான வாழ்க்கைக்கு எவ்விதத்திலெல்லாம் இடையூறு ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஓர் இனம் அடிமைப்படுத்தப்படும் போது அவ்வினத்தின் பெண்களும் குழந்தைகளுமே அதிகபட்ச துன்பத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறே தமிழீழத்தில் இன்று பெண்கள் பாரியளவிலான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். இதிலும் குறிப்பாக தமிழீழத்தின் விடுதலைக்கு முன்னின்றுழைத்த பெண்போராளிகள் சிறீலங்கா வன்கொடுமைப்படைகளின் பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றார்கள்.
எதிரியின் அழுத்தங்களுக்கு மேல், தாம் யாருக்காக உயிரையும் துறக்க தயாராக இருந்தார்களோ அச்சமூகத்தினாலேயே ஒதுக்கப்படும் பல்வேறு சந்தர்ப்பங்களும் தற்போது காணப்படுகின்றன. அதே போல் ஓர் பூர்ணமான சூழ்நிலையில் யாரின் தயவையும் எதிர்பாராத சுதந்திரப்பறவைகளாக வேர்விட்டிருந்த இவர்களின் ஆணிவேர்கள் பிடுங்கப்பட்டு, சாதாரண சமூகத்திற்கிடையில் வீசியெறியப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான திடீர் மாற்றத்தினை உளவியல் ரீதியாவும், பௌதீகரீதியாகவும் ஏற்றுக்கொள்வதற்கே நீண்டகாலமும், ஆதரவும் தேவைப்படும் நிலையில் எதிரியாலும் சொந்த சமூகத்தனராலும் பலமுனையிலும் தொடுக்கப்படும் தாக்குதலானது அவர்களின் வாழ்வதற்கான உத்வேகத்தையே இல்லாமல் செய்துகொண்டிருக்கின்றது.
இவை அனைத்திற்கும் மேலாக தமிழீழப் பெண்களையே எமது விடுதலைக்கெதிராக பயன்படுத்தும் இரகசிய திட்டத்தினை சிறீலங்கா அரசானது கச்சிதமாக அமுல்படுத்தி வருகின்றது. போரினால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் பெண்களை சிறீலங்கா படைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அரச இயந்திரம் மும்மரமாகவே செயற்பட்டு வருகின்றது.
இத்திருமணங்கள் அரச ஏற்பாட்டிலேயே கோலாகலமாக நடைபெறுவதுடன்,அது தொடர்பான பிரச்சாரங்களும் மும்மரமாக நடைபெறுகின்றன. விரும்பியோ விரும்பாமலோ தந்தை வழிச்சமூக அமைப்பு காணப்படும் இந்நாட்டில், கலப்பு திருமணங்களில் உருவாகும் வழித்தோன்றல்கள் தந்தையின் கலாச்சார வழித்தடத்தையே பின்பற்றத்தொடங்குவார்கள்.
இவ்வாறாக ஈழத்தமிழ் பெண்ணினத்தை பயன்படுத்தியே சிங்கள வம்சத்தை உருவாக்குவதற்கான மிகப்பாரிய திட்டத்துடன் சிறீலங்கா அரசு செயற்பட்டு வருகின்றது. இதில் ஒரு அங்கமாக தமிழீழப் பெண்களை படையில் சேர்ப்பதில் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருவதுடன் அவர்களை கட்டாயப்படுத்தியும் வருகின்றது. இவ்வாறான கட்டாயப்படுத்தலினூடு சில நூறு பெண்களை படையில் சேர்ப்பதில் வெற்றியும் பெற்றுள்ளது. இவ்வாறு சேர்க்கப்படும் பெண்களுக்கும் சிங்களப்படையினருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தி அதன்மூலம் திருமணப்பந்தங்களை உருவாக்குவதே அத்திட்டத்தின் மூலநோக்கமாகவும் இருக்கின்றது.
இவ்வாறு தமிழீழப்பெண்களுக்கெதிராக சதிவலைகள் பல்வேறு தளத்திலும் பின்னப்பட்டுவரும் இக்காலகட்டத்தில், அனைத்து ஈழத்தமிழரிடமும் ஓர் தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கின்றோம். போரினாலும், சமூகக்காரணிகளாலும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எமது சகோதரிகளின் நல்வாழ்விற்கான வழிமுறைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தவும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். எதிரிகளின் கொடுமைகளுக்கும், வற்புறுத்தல்களுக்கும் உள்ளாகிவரும் இவர்களை நீங்கள் ஒவ்வொருவரும் தான் கைகொடுத்து காப்பாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.
இச்சகோதரிகளில் பலர் எமது விடுதலைக்காக தம் உயிரையும் துச்சமென மதித்து போராடிய வீராங்கணைகள். இவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுங்கள். எமது நாட்டின் சொத்துக்களான பெண்களை வளப்படுத்துவதன் மூலமே எமது விடுதலையை விரைவுபடுத்துவதுடன் உலகிலே மிகச்சிறந்த நாட்டையும் கட்டியெழுப்பமுடியும்.
எமது தலைவரின் பெண்விடுதலை என்னும் பொழுது, அரசஅடக்குமுறையிலிருந்தும், பொருளாதார சுரண்டல்முறையிலிருந்தும், பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறித்து நிற்கின்றது. இப்பெண்கள் தினத்தில் பெண்ணின் விடுதலைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுக்க முன்வருமாறு வேண்டி நிற்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். தமிழீழத்தின் காவலர்கள்
என்று அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.