தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாட்சியளித்தவர்களின் பின்செல்லும் புலனாய்வாளர்கள்!

missingயாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வின் போது புலனாய்வு பிரிவினரின் பிரசன்னம் அதிகளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற சாவக்கசேரி பிரதேச செயலக  வாயிலுக்கு முன்பாக, சாட்சியம் அளிக்க வருகைதந்தோரை அவர்கள் கண்காணித்ததாக கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அமர்வுகளில் மூன்றாவது நாளாக நேற்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் ஜனாதிபதி ஆணைகுழுவின் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. இந்த அமர்வுகளில் சாட்சியம் அளிப்பதற்காக 205 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வுகளில் வழங்கப்பட்ட சில சாட்சியங்கள்

வட்டுவாகலில் சரணடைந்த மகன் குடும்பத்திலுள்ள ஐவரையும் காணவில்லை

வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, இன்று வரை காணவில்லை என்று கதிர்காமசேகரம் என்ற முதியவர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்,  சாட்சியமளித்தார். ‘எனது மகன் சத்தியமூர்த்தி, மருமகள் கவிதா, பேரப்பிள்ளைகளான தமிழ் முகிலன், தமிழ் அன்டன், இறைநிலா மற்றும் நான், வட்டுவாகல் பகுதியிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் 2009 மே மாதம் 18ஆம் திகதி சென்றோம். இதன்போது, புலிகள் அமைப்பில் ஒருநாளேனும் இருந்தவர்களை வந்து சரணடையுமாறு இராணுவத்தினர் அறிவித்தனர். விடுதலைப் புலிகளின் மரக்காலையில் முகாமையாளராக கடமையாற்றிய காரணத்தால் எனது மகன் சரணடைந்தார். அவரை விட்டு வரமாட்டேன் என மருமகளும் அவரது குழந்தைகளுடன் சென்றார். அவர்கள் ஐவரையும் பஸ் ஒன்றில் ஏற்றினார்கள். என்னை, முகாமுக்குச் செல்லுமாறும் விசாரணை முடிய தாங்கள் வருவோம் என்றும் கூறிச் சென்றனர். ஆனால் இன்றுவரை அவர்கள் திரும்பிவரவில்லை’ என்று சாட்சியமளித்தார்.

காணாமற்போன மகளின் படம் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருந்தது

காணாமற்போன எனது மகள் சிவலிங்கம் அனுசியாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஒருமுறை கண்டேன். அதன் பின்னர் அவரது படம் முகப்புத்தகத்தில் தரவேற்றியிருந்ததைப் பார்த்தேன் என, தாயொருவர் தெரிவித்தார். ‘கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய எனது மகளை, 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதியன்று, விடுதலைப் புலி உறுப்பினர்கள் பிடித்துச் சென்றனர். தொடர்ந்து, ஸ்கந்தபுரம் பகுதியில் புலிகளில் சீருடையுடன் எனது மகளை கண்டேன். அதன் பின்னர் தகவல் இல்லை. இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மகளைத் தேடிச் சென்று, பார்வையாளர்கள் காத்திருக்கும் பகுதியில் அமர்ந்திருந்தேன். அப்போது, வெள்ளை நிறம் கொண்ட உடுப்புக்களுடன் பெண்கள் நிற்பதைப் பார்த்தேன். அதில் எனது மகளை அடையாளங் கண்டேன். அங்கு, இராணுவத்தினரும் பொலிஸாரும் அதிகம் இருந்தமையால் நான் மகளை அழைக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றிச்சென்றனர். அங்கு விசாரித்தபோது, நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு நடக்கின்றது அதற்காக ஏற்றிச் செல்கின்றோம் என்றனர். இந்நிலையில், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேஸ்புக்கில் எனது மகளின் புகைப்படங்களை ஒருவர் பதிவேற்றம் செய்திருந்தார்’ என்று அந்த தாய் குறிப்பிட்டார்.

 இராணுவமுகாமில் இருந்து கடிதம் அனுப்பினார் மகன்

இராணுவ முகாமில் இருந்து மகன் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்தது. ஆனால், மகன் இன்னமும் திரும்பி வரவில்லையென காணாமற்போன த.தவச்செல்வன் என்பவரது தாயார் சாட்சியமளித்தார். ‘யாழ்ப்பாண மாநகர சபையில் பணியாற்றிய எனது மகன், கடந்த 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியன்று வேலைக்குச் சென்ற போது காணாமற்போனார். எனது மகனை செம்மணி முகாமில் தடுத்து வைத்து விசாரணை செய்ததை கண்டதாக கிராமஅலுவலர் கூறினார். அதன் பிறகு மகனைக் காணவில்லை. இரண்டு வருடங்களின் பின்னர் மகனிடமிருந்து கடிதமொன்று வந்தது. தான் ஒரு இராணுவ முகாமில் உள்ளதாகவும் கையில் சின்ன காயம் உள்ளது எனவும், தான் நலமாக உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். மேலும், அந்தக் கடிதத்தை யாருக்கும் காட்டவேண்டாம் என்றும் தனது படம் மற்றும் தனது நலம் பற்றி அடுத்த கடிதத்தில் எழுதுவதாகவும் கூறியிருந்தார். ஆனால், அதன் பின்னர் கடிதமும் வரவில்லை மகனும் வரவில்லை’ என அந்தத் தாய் கூறினார்.

மகனை இராணுவத்தினர் கொன்று புதைத்து விட்டனர்

அரியாலை பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எனது மகனுடன் சேர்த்து 8 பேரை கொன்று புதைத்தாக கச்சேரி காட்டுக்கந்தோரைச் சேர்ந்த செல்லையா சந்திரசேகரன் என்ற முதியவர் சாட்சியமளித்தார்.“எனது மகன் லோகேஸ்வரன், காவலாளியாக கடமையாற்றியவர். கடந்த 1996ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதியன்று, வீட்டுக்கு அருகிலுள்ள இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள், மகனையும் மேலும் 7 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை அரியாலை முகாமுக்கு அழைத்துச்சென்று சித்திரவதை செய்து கொன்று புதைத்துவிட்டனர். நான் முகாமுக்கு சென்று கேட்டபோது, ‘மகன் முடிஞ்சுது தேடாதே’ என்று என்னை விரட்டினர். எனது மனைவியும், இன்னொரு மகனும் விமானக் குண்டுவீச்சில் இறந்துவிட்டனர். நானும் பிறிதொரு மகனுமே தற்போது உள்ளோம். எனக்கு நட்டஈடு வேண்டும்” என்று அந்த தந்தை சாட்சியமளித்தார்.

விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மகன் வீடு வந்து சேரவில்லை

விடுதலை செய்யப்பட்ட மகன் இன்னமும் வீடு வந்து சேரவில்லை. இருந்தும், மகன் திரும்பி வருவார் என நம்பிக் கொண்டிருப்பதாக காணாமற்போன கந்தசாமி சயந்தன் (காணாமற்போகும் போது வயது 18) என்பவரின் பெற்றோர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்தனர். ‘மந்துவில் சிறிபாரதி மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த எமது மகன், 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று பாடசாலைக்கு வீடு திரும்பவில்லை. சிறிது நாட்களின் பின்னர், மகன் தங்களுடன் இருப்பதாக விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூறினர்.

இந்நிலையில், 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதியன்று, உயிலங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சுற்றிவளைப்பில் சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களில் எமது மகனும் இருந்தார். இதயவீணையில் எமது மகனின் பெயரும் சொல்லப்பட்டது. இதன் பின்னர், புதைந்த இராணுவ ஜீப் வண்டியை சிலர் தள்ளிக்கொண்டு நிற்பது போன்ற படம், பத்திரிகையொன்றில் கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வெளியானது. அப்படத்தில் எமது மகனும் காணப்பட்டார். 2007ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டுக்கும் இடையில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் 200பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக தென்றல் வானொலியில் பெயர் விவரம் வாசிக்கப்பட்டது. அதில் எமது மகனின் பெயரும் வாசிக்கப்பட்டது. ஆனால், மகன் இன்றுவரை திரும்பி வரவில்லை’ என்றனர்.

Comments
Loading...