Designed by Iniyas LTD
சாத் நாட்டு ராணுவம் போகோ ஹரம் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல்
நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி தொடர்ந்து தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்டை நாடுகளான கேமரூன், சாத் உள்ளிட்ட நாடுகளிலும் அவர்களின் அட்டூழியம் நீடித்து வருவதால், அந்த நாடுகளின் ராணுவமும் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள திக்வா என்ற நகரம் போகோ ஹரம் தீவிரவாதிகளின் வசம் இருந்தன. நகரை மீட்கும்வகையில் தீவிரவாதிகள் மீது சாத் நாட்டு ராணுவம் நேற்றுமுன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவரும் இறந்தார்.
ராணுவத்தின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாததால், தீவிரவாதிகள் திக்வா நகரை விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து ராணுவம் அந்த நகரை மீட்டது. இதுகுறித்து சாத் ராணுவ அதிகாரி கூறுகையில், ‘திக்வா நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்’ என்று தெரிவித்தார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை நைஜர் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், சாத் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.