Designed by Iniyas LTD
“சார்க்’ மாநாடு ரத்து செய்யப்படலாம் : இந்தியா உள்ளிட்ட நாடுகளின் புறக்கணிப்பு எதிரொலி
இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் புறக்கணிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த “சார்க்’ மாநாடு ரத்து செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் 19 – ஆவது “சார்க்’ மாநாடு, வரும் நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவைப் பின்பற்றி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன. மொத்தம் 8 உறுப்பு நாடுகளைக் கொண்ட “சார்க்’ அமைப்பில் 4 நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளன. இது அந்நாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில்தான் மாநாட்டை ரத்து செய்வது என்று “சார்க்’ அமைப்புக்கு தற்போது தலைமைப் பொறுப்பு வகிக்கும் நேபாளம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எந்த நாடு பங்கேற்காவிட்டாலும், “சார்க்’ மாநாட்டை நடத்துவோம் என்று பாகிஸ்தான் முன்னதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் நேபாளம் புதிய முடிவை எடுக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் “சார்க்’ மாநாடு ரத்து செய்யப்படும் என்று நேபாள ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒத்திவைக்க இந்தியா வலியுறுத்தல்: இதனிடையே, தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசியபோது, சார்க் உச்சி மாநாட்டை இந்தியா, ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய 4 நாடுகளும் புறக்கணிப்பதால், மாநாட்டை ஒத்திவைப்பதை தவிர வேற வழியில்லை என்றார்.
மேலும், அவர் கூறுகையில், மாநாட்டை ஒத்திவைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சார்க் அமைப்புக்கு தலைமை வகிக்கும் நேபாளம்தான் வெளியிட வேண்டும் என்றார்.
காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அண்மையில் நிகழ்த்திய தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய இருந்தபோதிலும், இந்தியாவின் குற்றச்சாட்டை அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதைத்தவிர, ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் அண்மையில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், காஷ்மீர் விவகாரத்தைக் குறிப்பிட்டு பேசியதுடன், பயங்கரவாதி பர்ஹான் வானியைப் போற்றி புகழ்ந்து கருத்து தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவின் கோபத்தைத் தூண்டும் வகையில் அமைந்தன. இதைத்தொடர்ந்து, சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளாக சிந்து நதி நீர்ப் பகிர்வு, வர்த்தக உறவுக்கான சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது. அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் நடைபெறும் “சார்க்’ மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதே முடிவைப் பின்பற்றியுள்ளன. இதுகுறித்து வங்கதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
வங்கதேசத்தின் உள்விவகாரங்களில் வெளிநாடு ஒன்று (பாகிஸ்தான்) தலையிடுவது அதிகரித்துள்ளது. பிராந்திய அளவில் நல்லுறவுடனும், ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என்றே வங்கதேசம் விரும்புகிறது. ஆனாலும்கூட, அதனை முன்னெடுத்துச் செல்ல சாதகமான சூழல் வேண்டும். தற்போது அப்படி ஓர் ஆக்கப்பூர்வமான நிலை இல்லாததால் “சார்க்’ மாநாடு வெற்றிகரமாக நடைபெற வாய்ப்பில்லை. அதைக் கருத்தில்கொண்டு அந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், பிராந்தியத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைக் காரணமாகக் கூறி பூடானும் “சார்க்’ மாநாட்டை புறக்கணித்தது. ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை அந்நாட்டு அதிபர் முகமது அஸ்ரஃப் கனி, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான தகவல்களை நேபாளத்திடம் இந்தியா உள்பட 4 நாடுகளும் தெரிவித்துவிட்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிராக “சார்க்’ உறுப்பு நாடுகள் அணி திரண்டிருப்பதன் விளைவாக மாநாட்டை ரத்து செய்யும் நிலைக்கு தற்போது நேபாளம் தள்ளப்பட்டிருக்கிறது.