Designed by Iniyas LTD
சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் வங்கி வடக்கு, கிழக்கிற்கு தேவை இல்லை
தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் தனியார் வங்கியை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்
நிதி அமைச்சு மீதான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்து வங்கியில் நினைவுச்சுடர் ஏற்றியமைக்காக பிரபல தனியார் வங்கியான HNB ஊழியர்கள் இருவர் கிளிநொச்சியில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்,
மேலும் யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த தமது தமிழ் உறவுகளுக்காக கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வடக்கு முதல்வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து தீப்பந்தங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், உயிரிழந்த தமது உறவினர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் குறித்த ஊழியர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,
மேற்படி தனியார் வங்கி தமிழர்களை ஏற்க மறுத்தால் வடக்கில் அப்படியொரு வங்கியே தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ள்ளார்.
அதோடு உயிரிழந்த உறவினர்களுக்கு கண்ணீர் விடுகின்ற உரிமை தமிழர்களிற்கு இல்லையெனில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் மனோ கணேசன் வசமிருக்கும் நல்லிணக்க அமைச்சுக்களை மூடிவிடுங்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
