Designed by Iniyas LTD
சிறிலங்கா படைகளுக்கு கருவிகள், தொழில்நுட்பங்களை வழங்க அமெரிக்கா இணக்கம்
சிறிலங்காவில் அண்மைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினருக்கு, அமெரிக்கா ஆதரவையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை நேற்று பாதுகாப்பு அமைச்சின் சந்தித்துப் பேச்சு நடத்திய அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இந்த உதவியை வழங்க அமெரிக்கா முன்வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைச் சந்தித்து, அனர்ததங்களின் போதான முப்படைகளின் கடப்பாடு மற்றும் பொறுப்புகள் தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அமெரிக்க தூதுவர் நடத்தினார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான முப்படைகளின் உதவிப் பணிகள் தொடர்பாக அமெரிக்கத் தூதுவருக்கு சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரவில் சென்றடைவதற்கான கருவிகள், மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, சிறிலங்கா படையினருக்கு அனர்த்த மீட்புப்பணிகளுக்குத் தேவையான கருவிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவ ஆற்றலை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்தார்.
இந்தப் பேச்சுக்களின் போது அமெரிக்க தூதரக துணை பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப் இங்லிஷ் மற்றும் சிறிலங்காவின் முப்படைகளின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.