தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறுமியின் உயிரைப் பறித்த ஊஞ்சல்!

article_1489428052-aaஊஞ்சல் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண்களில் ஒன்று சரிந்து விழுந்தில், 8 வயதான சிறுமி, பரிதாபகரமாகப் பலியான சம்பவமொன்று, சிலாபம், வனாத்தவில்லு எரிக்குளன்வில்லுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வனாத்தவில்லுவ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் தரம் 3 இல் பயின்ற, எட்டு வயதான சுதிபா தர்ஷனி என்ற சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார். பக்கத்து வீட்டுக்குச் சென்ற குறித்த சிறுமி, அங்கு, இரண்டு கொங்கிரீட் தூண்களுக்கு இடையில் ஊஞ்சலாகக் கட்டப்பட்டிருக்கும் சாரியில், அந்த வீட்டுச் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அதிலொரு கொங்கிரீட் தூணே, சிறுமியின் மீது சரிந்துவிழுந்துள்ளது என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பலியான சிறுமியின் தாயார், வேலைக்குச் செல்பவர் என்றும் தன்னுடைய மகளை, பக்கத்து வீட்டிலேயே விட்டுச்செல்வார் என்றும் அறியமுடிகிறது.

ஊஞ்சல் உள்ள வீட்டில் தன்னுடைய வயதையொத்த சிறுமி இருப்பதனால், அச்சிறுமியும் அவ்வீட்டுக்கு செல்வதை மிகவும் விரும்புவார் என்றும் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த அசாதாரண சம்பவம், கடந்த 12ஆம் திகதியன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, அவ்வீட்டிலிருந்தவர்கள், சிறுமியை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றபோதும், அவருடைய உயிரைக் காப்பற்ற முடியாமல் போய்விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி, அக்குடும்பத்துக்கு ஒரேயொரு பெண்பிள்ளை என்றும், அச்சிறுமிக்கு ஐந்து சகோதரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனைக்கு பின்னர், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தினால், அக்கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Comments
Loading...