தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறைகளில் கைதிகள் மரணமடைவது தொடர்பாக அறிக்கை தர வேண்டுகோள்

மத்திய சிவில் உரிமை மையத்தின் இணை செயலாளராக இருப்பவர் வக்கீல் கே.கேசவன். இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது:- ‘தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்துக் கொடுப்பது இல்லை. இதனால், தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச் சாலைகளில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 1095 கைதிகள் மர்மமான முறையிலும், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதிகள், அந்தந்த பகுதியில் உள்ள சிறைகளுக்கு சென்று கைதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி நீதிபதிகளும் தங்களது ஆய்வு அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கைக்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் உள்ள சிறைகளில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 264 கைதிகள் இறந்துள்ளனர். இதில் 140 கைதிகளில் இறப்பு அறிக்கை வழங்கப்படவில்லை. 67 கைதிகள் இறப்பு குறித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 3 கைதிகளின் குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 6ந் தேதி வரை சிறையில் கைதி இறந்தால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டள்ளது’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.prison

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கைதிகள் இறப்பு குறித்த அறிக்கையை கேட்கும்போது குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் அதை வழங்குவதில்லை. கடந்த 2014ம் ஆண்டு ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.நாகமுத்து ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவினால், இந்த அறிக்கைகளை தர மாஜிஸ்திரேட்டுகள் மறுக்கின்றனர். எனவே, அறிக்கையை வழங்கவேண்டும் என்று மாஜிஸ்திரேட்டுகளுக்கு இந்த ஐகோர்ட்டுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதிகள், பிறப்பித்த உத்தரவு வருமாறு ‘சிறைகளில் கைதிகள் மரணமடைவது தொடர்பாகவும், அது தொடர்பாக அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை தொடர்பாக தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம்.

ஆனால், தேர்தல் நடை பெறுவதை காரணம் காட்டி அதிகாரிகள் கால அவகாசம் கேட்டனர். தற்போது தேர்தல் முடிந்து விட்டது. எனவே ஒரு வார காலத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், தமிழக உள்துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகவேண்டும்’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த வழக்கு விசாரணை வருகிற ஜூலை 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Comments
Loading...